நுண்சத்து குறைபாட்டால் வரும்  மகசூல் இழப்பை தடுக்கும் முறைகள்...

திருநெல்வேலி:  நெல் உள்ளிட்ட பயிர்களில் நுண்சத்து குறைபாட்டைத் தடுப்பது தொடர்பாக, சேரன்மகாதேவி வட்டார வேளாண் உதவி இயக்குநர்
நுண்சத்து குறைபாட்டால் வரும்  மகசூல் இழப்பை தடுக்கும் முறைகள்...


திருநெல்வேலி:  நெல் உள்ளிட்ட பயிர்களில் நுண்சத்து குறைபாட்டைத் தடுப்பது தொடர்பாக, சேரன்மகாதேவி வட்டார வேளாண் உதவி இயக்குநர் உமா மகேஸ்வரி ஆலோசனை தெரிவித்துள்ளார். அவர் கூறியது:
நெற்பயிர் உள்பட அனைத்துப் பயிர்களும் நன்கு வளர்ந்து நிறைந்த மகசூல் தர 16 வகையான ஊட்டச்சத்துகள் தேவை. பேரூட்டங்களான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, இடைநிலை ஊட்டங்களான சுண்ணாம்புச்சத்து, மக்னீசியம், கந்தகம், நுண்ணூட்டச் சத்துகளான துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு, தாமிரம், மாலிப்டினம், போரான், குளோரின் போன்றவையும், இதர சத்துகளான கார்பன், ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்றவையும் முக்கியம்.
இவற்றில் கார்பன், ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் ஆகியவற்றைக் காற்றிலிருந்தும், பாசன நீரிலிருந்தும் பயிர்கள் எடுத்துக் கொள்கின்றன. குளோரின் சத்தை பாசன நீரிலிருந்தும், மண்ணிலிருந்தும் எடுத்துக் கொள்கின்றன. எனவே இவற்றை நாம் உரமாக இடுவது இல்லை. சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகம் போன்றவை பொதுவாக நல்ல மண்ணில் போதிய அளவு இருப்பதால் அவற்றை நெல்லுக்கு உரமாக இடுவது இல்லை. 
நெற்பயிர் அதிகளவில் எடுத்துக் கொள்ளும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகியவற்றை  உரமாக இடுகிறோம். இவற்றைத் தவிர, நெற்பயிர் நுண்ணூட்ட சத்துகளை மிகக் குறைவாக எடுப்பதால் பலகாலமாக ரசாயன உரமிடாமல் இருந்தோம். ஆனால், தற்போது தமிழ்நாட்டில் பரவலாக பலவகைப்பட்ட மண் இருப்பதும், நுண்ணூட்டத் சத்து பற்றாக்குறை இருப்பதும் மண் பரிசோதனை நிலையங்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல பயிர்களிலும் முக்கியமாக நெற்பயிரில் இதன் பற்றாக்குறை அறிகுறி தென்படுவதும், மகசூல் பாதிப்பு ஏற்படுவதும் மண் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.
நெற்பயிரில் நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறை ஏற்பட சில முக்கிய காரணங்கள் உள்ளன. அவற்றின் விவரம்: உயர் விளைச்சல் தரும் ரகங்களை தொடர்ந்து சாகுபடி செய்யும்போது இவை மண்ணிலுள்ள நுண்ணூட்டச் சத்துகளை அதிகளவில் எடுத்து வருவதால் மண்ணில் இதன் வளம் குன்றி விடுகிறது. 
நுண்ணூட்டச் சத்துகளை இதுவரை வழங்கி வந்த இயற்கை உரங்களான  பசுந்தாள் உரம், தொழுவுரம், கம்போஸ்ட் உரம் போன்றவற்றை போதிய அளவு இடாத சூழ்நிலை மற்றும் பயிர் சுழற்சி முறை காரணமாக ஒரு பசுந்தாளைப் பயிர் சாகுபடி செய்வது நிறுத்தப்பட்டு விட்டதும் இதற்கு காரணம். அதிக குளிர், அதிக வெப்பம், பனி போன்ற தட்பவெட்ப நிலை மாறுதல்களாலும் மேற்கண்ட சத்துகள் மண்ணில் இருந்தாலும், அது பயிருக்கு கிடைக்காமல் போய்விடுகின்றன. 
அதிக மழை மற்றும் வெள்ளத்தின்போது நெற்பயிர் மூழ்குவதாலும், வெள்ளநீர் வடியும்போது ஏற்படும் சத்து இழப்பாலும் பற்றாக்குறை ஏற்படுகிறது. தழைச்சத்து, மணிச்சத்து ரசாயன உரங்களை தொடர்ந்தும் அதிகமாக பயன்படுத்துவதால் நுண்ணூட்டப் பற்றாக்குறை ஏற்படும்.
களர், உவர் கரையாத சுண்ணாம்பு ஆகியவை அதிகம் உள்ள பிரச்னைக்குரிய மண்ணில் நுண்ணூட்டச் சத்து பயிருக்கு கிடைக்காது. அதிக அளவு களி அல்லது மணல் சார்ந்த நிலம்,  வளமான மேல் மண் நீரால் அரிக்கப்படுதல், பிரச்னைக்குரிய உப்புகளை அதிகம் கொண்ட நிலத்தடிப் பாசன நீரைப் பாய்ச்சி நெல் சாகுபடி செய்யும்போது நுண்ணூட்டச் சத்து பயிருக்கு கிடைக்காத நிலை போன்ற பல காரணங்களால் நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.
நெற்பயிருக்கு நுண்ணூட்டச் சத்துக்கு நிர்வாக முறைகள்: பொதுவாக தழை உரம், தொழுவுரம், கம்போஸ்ட் அல்லது பதப்படுத்தப்பட்ட சர்க்கரை ஆலைக் கழிவு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஆண்டுதோறும் நிலத்துக்கு அளித்து வந்தால் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டைத் தவிர்க்கலாம். 
நடவு வயலில் ஏக்கருக்கு 10 கிலோ நன்கு பொடி செய்யப்பட்ட துத்தநாக சல்பேட் உரத்தை 20 கிலோ மணல் அல்லது அல்லது தூள் செய்யப்பட்ட தொழு உரத்துடன் கலந்து வயலில் பரம்படித்து சமன்செய்த பின்னர் மண்ணில் மேலாக தூவி பின்பு நடவுசெய்ய வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவு தழை உரம், தொழுவுரம் இட்டிருந்தால் ஏக்கருக்கு 5 கிலோ துத்தநாக சல்பேட்  அடி உரமாக இட்டால் போதும்.
அதிகக் களி நிலமானால் துத்தநாக சத்து பிடித்து வைக்கப்பட்டு பயிருக்கு கிடைக்காத நிலை ஏற்படுவதைத் தவிர்க்க ஏக்கருக்கு 5 கிலோ துத்தநாக சல்பேட்டை அடியுரமாகவும், மீதி 5 கிலோவை முதல் மேலுரத்தின்போது தனியாகவோ, மூரியேட் பொட்டாஷ் உரத்துடன் கலந்தோ இடலாம். 
மண் பரிசோதனை முடிவில், நிலம் அதிகளவு மணிச் சத்துள்ளதாகக் கண்டறியப்பட்டால் துத்தநாக சல்பேட் உரத்தை அடியுரமாக இடக்கூடாது. அதற்குப் பதில் பயிர் மேல் 0.5 சதவீத கரைசலாக தெளிக்கவும். 
அண்மைக்காலமாக நெற்பயிருக்கு எனத் தனி நுண்ணூட்ட உரக் கலவையும் வேளாண் துறையினரால் தயார் செய்து வழங்கப்படுகிறது. இதில் பல நுண்ணூட்டச் சத்துகள் குறிப்பிட்ட விகிதாசாரத்தில் கலக்கப்பட்டுள்ளன. இதை நெற்பயிருக்கு ஏக்கருக்கு 5 கிலோ வீதம் 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து நடவு வயலில் மேலாகத் தூவிப் பின்பு நடவு செய்யவும்.
இம்முறைகளைப் பின்பற்றினால் நெற்பயிரில் நுண்சத்து குறைபாட்டால் வரும் மகசூல் இழப்பை தவிர்க்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com