விளைச்சலை பெருக்க விதைகளின் தரமறிந்து விதைப்பது அவசியம்

விளைச்சலை பெருக்க விளைவிக்கும் நெல் பயிர் ரகங்களின் குணமறிந்து மற்றும் விதைகளின் தரமறிந்து விதைப்பது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளைச்சலை பெருக்க விதைகளின் தரமறிந்து விதைப்பது அவசியம்


திருவாரூர்: விளைச்சலை பெருக்க விளைவிக்கும் நெல் பயிர் ரகங்களின் குணமறிந்து மற்றும் விதைகளின் தரமறிந்து விதைப்பது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூர் மாவட்டத்துக்கான தஞ்சை சரக விதைப் பரிசோதனை அலுவலர் து.சிவ
வீரபாண்டியன், திருவாரூர் விதைப் பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் ச.கண்ணன், வேளாண்மை அலுவலர் க.புவனேஸ்வரி ஆகியோர் தெரிவித்திருப்பது:
திருவாரூர் மாவட்டத்தில் நெற்பயிரானது, குறுவை, தாளடி என்ற இரு போகத்திலும் அல்லது ஒரு போகமாக சம்பா பருவத்திலும் பயிரிடப்படுகிறது. தற்போது மாறிவரும் கால சூழ்நிலைகளில் விவசாயிகள் கோடை பருவத்திலும் சில பகுதிகளில் நெல் சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். நெற்பயிரின் விளைச்சலை பல்வேறு காரணிகள் நிர்ணயிக்கும் போதும் நல்ல ரகங்களை விவசாயிகள் தேர்ந்தெடுத்து, அந்த ரகங்களின் விதை தரத்தையும் மற்றும் குணாதிசயங்களையும் அறிந்து சாகுபடி மேற்கொண்டால் அதிக விளைச்சல் பெறலாம். பெரும்பாலும் திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நீண்டகால ரகங்களான சாவித்ரி, சீ.ஆர்.1009.சப்.1, ஆடுதுறை 50  மற்றும் மத்திய கால ரகங்களான சம்பா மகசூரி ( பீபிடி 5204), டி.கே.எம்.13, கோ(ஆ ர்) 50, எம்.டி.யூ. 7029, சுவர்ணாசப்.1, நெல்லூர் மகசூரி (என்எல்ஆர் 34449), ஆடுதுறை 38, ஆடுதுறை 42, ஆடுதுறை 39 மற்றும் ஆடுதுறை 46 ஆகியவை பயிரிடப்படுகின்றன.
 இந்த ரகங்களின் தனிப்பட்ட குணாதிசயங்களை அறிந்து அதற்கேற்ப சாகுபடி முறைகளை பின்பற்ற வேண்டும்.
நீண்டகால ரகங்கள்
சம்பா பட்டத்தில் ஒரு போகமாக (ஆகஸ்ட் 15-க்குள் விதைப்பு) பயிர் செய்ய ஏற்ற நீண்டகால நெல் ரகங்கள் சி.ஆர்.1009 சப்-1 சாவித்திரி, ஆடுதுறை 40, ஆடுதுறை 50 ஆகியவைகளாகும்.
பின் சம்பா, தாளடி பருவம் செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி 15 தேதிக்குள் முடிவடையும். இந்த பருவத்திற்கு ஆடுதுறை 38, ஆடுதுறை 39, ஆடுதுறை 42, ஆடுதுறை 46, ஆடுதுறை 49, கோ 50, கோ 48, கோ 49, கோ 43 ஐ.ஆர் 20, மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி, திருச்சி 3, டிகேஎம் 13 போன்ற ரகங்கள் உள்ளன.
ஆடுதுறை 38
இது 130 - 135 நாட்கள் வயதுடையது. ஐ.ஆர்.1529 - 680 - 3-2, ஐ.ஆர்.4432-52-6-4 மற்றும் ஐ.ஆர் 7963-30-2 ஆகிய பெற்றோர்களை இனக்கலப்பு செய்து உருவாக்கப்பட்டது. ஒரு ஏக்கருக்கு 6200 கிலோ வரை விளைச்சலை தரவல்லது. நடுத்தர, நீண்டு வளரும் குட்டைப் பயிர், நீண்ட சன்ன ரக தானிய அமைப்பைக் கொண்ட இதன் ஆயிரம் நெல் மணிகளின் எடை 21 கிராம். பாக்டீரியா இலை கருகலுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. இந்த ரகத்தின் விதை சேமிக்கும் காலம் குறைவு.
ஆடுதுறை 39
120-125 நாட்கள் வயதுடைய ஆடுதுறை 39 ரகம் ஐ.ஆர் 8, ஐ.ஆர் 20 ஆகிய இரு பெற்றோர்களை இனக்கலப்பு செய்து உருவாக்கப்பட்டது. நடுத்தரமான குட்டை பயிர் தன்மையுடைய அந்த ரகம் ஒரு ஏக்கருக்கு 5000 கிலோ மகசூல் தரவல்லது. நடுத்தர சன்ன ரக தானிய அமைப்பைக் கொண்டுள்ள இதன் மணிகளின் ஆயிரம் மணியின் எடை 23.8 கிராம். இது குலை நோய் மற்றும் இலை உறை அழுகல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டது.
ஆடுதுறை 42
நீண்ட சன்ன மணிகளைக் கொண்ட ஆடுதுறை 42, 125 நாட்களில் ஏக்கருக்கு சராசரியாக 6 டன் விளைச்சலை தரவல்லது. சாயாத் தன்மை கொண்டது. குலை நோய்க்கும், புகையானுக்கும் நடுத்தர எதிர்ப்புத் திறன் கொண்டது.
ஆடுதுறை 46
இந்த ரகம் 136 நாள்கள் வயதுடையது. ஆடுதுறை 38 மற்றும் கோ 45 ஆகிய இரு பெற்றோர்களை இனக்கலப்பு செய்து உருவாக்கப்பட்டது. கதிர்களில் நீண்ட மணிகள் அலசலாக காணப்படும், நல்ல தூர்கட்டும் திறனும் செங்குத்தான செடி அமைப்பும், சாயாத தன்மையும் கொண்ட இந்த ரகம் ஒரு ஏக்கருக்கு 6.2 டன் விளைச்சல் தரவல்லது. நீண்ட சன்ன ரக தானிய அமைப்பைக் கொண்ட இதன் ஆயிரம் மணிகளின் எடை 23.8 கிராம். குருத்துப்பூச்சி, இலை மடக்கு புழுவுக்கு எதிர்ப்புத் திறன் உடையது. குலை நோய் இலைக்கருகல் நோய் மற்றும் துங்ரோ நோய்களுக்கும் எதிர்ப்புத் திறனுடையது.
ஆடுதுறை 49
132 நாள்கள் வயதுடைய இந்த ரகம் சி.ஆர்.1009 என்ற குட்டை பருமன் அரிசி ரகத்தையும் சீரக சம்பா என்ற குட்டை சன்ன அரிசி கொண்ட ரகத்தையும் ஒட்டு சேர்த்து பின் தேர்வு முறையில் உருவாக்கப்பட்டது. நடுத்தர குட்டை உயரமும், செங்குத்தான செடி அமைப்பும், சாயாத தன்மையும் உடைய இந்த ரக கதிர்களில் மணிகள் நெருக்கமாக முத்து கோத்தது போன்ற அமைப்புடன் தோற்றமளிக்கும். வயலில் அறுவடையின்போது நெல் மணிகள் உதிராமல் இருப்பதால் இதன் மூலம் ஏற்படும் விளைச்சல் இழப்பு இந்த ரகத்தில் இல்லை. மத்திம சன்ன அரிசி கொண்ட இந்த ரகத்தின் ஆயிரம் மணி எடை 14.0 கிராம். முழு அரிசி காணும் திறன் அதிகம். சாதம் ஒட்டாமல் நல்ல சுவையுடன் இருக்கும். இந்த ரகம் சராசரியாக ஏக்கருக்கு 6178 கிலோ விளைச்சல் தரவல்லது. குலை நோய், இலைக்கருகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் தன்மை உடையது.
கோ(ஆர்) 48
130 - 135 நாள்கள் வயதுடைய கோ(ஆர்) 48 என்ற ரகம் கோ 43 மற்றும் ஏஎஸ்.டி 19 பெற்றோர்களை இனக்கலப்பு செய்து தேர்வு முறையில் உருவாக்கப்பட்டது. மத்திம சன்ன மணிகளைக் கொண்ட இந்த ரகம், சற்று உயரமாக வளரக்கூடியது. கதிர் முதிர்ச்சி அடையும்போது சாயும் தன்மை கொண்டது. இதன் ஆயிரம் மணிகளின் எடை 18 கிராம். ஏக்கருக்கு சராசரியாக 9625 கிலோ வரை மகசூல் தரவல்லது. குலைநோய், துங்ரோ மற்றும் இலையுறை கருகல் நோய்களுக்கு மிதமான எதிர்ப்பு சக்தி கொண்டது.
கோ(ஆர்) 49
130 நாட்கள் வயதுடைய குட்டையான செடி அமைப்பு கொண்ட கோ(ஆர்)49 என்ற 
ரகம் சி-20 மற்றும் ஆர்.என்.ஆர் 52147 என்ற ரகங்களை இனக்கலப்பு செய்து உருவாக்கப்பட்டது. அதிக தூர்கட்டும் திறன் உடையது. நெல் மத்திம சன்னம், நுனி சற்று வளைந்து காணப்படும். இதன் ஆயிரம் மணிகளின் எடை 18 கிராம். நடுத்தர மாவுசத்து மற்றும் சிறந்த சமையல் பண்புகள், பின் சம்பா பருவத்திற்கு ஏற்றது. ஏக்கருக்கு சராசரியாக 6286 கிலோ மகசூல் தரவல்லது.
கோ (ஆர்) 50
இரண்டு மத்திம கால ரகங்களான கோ 43, விபிபி 38 ஆகிய பெற்றோர்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது. நல்ல செடி அமைப்புக் கொண்டது. நீண்ட (30 செ.மீ) கதிர்களில் மத்திம சன்ன மணிகள் கவர்ச்சியாக இருக்கும். இதன் ஆயிரம் மணிகளின் எடை 20.5 கிராம். பின் சம்பா மற்றம் தாளடிக்கு ஏற்ற இந்த
ரகம் 130-135 நாள்களில் ஒரு ஏக்கருக்கு 6 டன்கள் மகசூல் தரவல்லது. குலைநோய், இலை உறை அழுகல் நோய், பாக்டீரியா இலைகருகல் நோய், தத்துப் பூச்சிக்கு மிதமான எதிர்ப்புத் தன்மையுள்ளது.
திருச்சி 3
 இட்லி செய்வதற்கென்றே திருச்சி 3 என்ற 135 நாள்கள் வயதுடைய மத்திம கால இரகம் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஒரு ஏக்கருக்கு 5.8 டன் வரை விளைச்சலைத் தரவல்லது. உவர் நிலத்திலும் இதை பயிரிடலாம். விபிபி 43, சீரகச்சம்பா ஆகிய பெற்றோர்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்ட இந்த ரகத்தின் நெல் நடுத்தர பருமனாக இருக்கும். இதன் ஆயிரம் மணிகளின் எடை 23 கிராம். தண்டுத்துளைப்பான், இலைச்சுருட்டு புழு, குலைநோய் ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது.
ஐ.ஆர். 20
130-135 நாட்கள் வயதுடைய ஐ.ஆர் 20 என்ற ரகம் ஐ.ஆர் 262 மற்றும் டீகேஎம் 6 ரகங்களை இனக்கலப்பு செய்து உருவாக்கப்பட்டது. நடுத்தர குட்டைப் பயிர் ஒரு ஏக்கருக்கு 5000 கிலோ வரை மகசூல் தரவல்லது. நடுத்தர சன்ன ரக தானிய அமைப்பைக் கொண்ட இதன் ஆயிரம் மணிகளின் எடை 19 கிராம். நெல் தண்டு துளைப்பானுக்கு எதிர்ப்பு திறன் கொண்டது.
டிகேஎம்.13
டிகேஎம் 13 என்ற ரகமானது 130 நாள்களில் சராசரியாக ஏக்கருக்கு 5938 கிலோ விளைச்சல் தரவல்லது. இது டபுள்யூ  ஜிஎஸ் 32100 மற்றும் சுவர்ணா ரகங்களை இனக்கலப்பு செய்து தேர்வு முறையில் உருவாக்கப்பட்ட ரகம். இது காவிரி டெல்டா பகுதியில் தாளடிப் பட்டத்திற்கும் ஏனைய அனைத்து மாவட்டங்களில் சம்பா பட்டத்திற்கும் பயிரிட ஏற்றது. நடுத்தர உயரத்துடன் அதிக தூர்கள் மற்றும் சாயாத தன்மை உடையது. இந்த ரகம் இலை சுருட்டு புழு, குருத்துப்பூச்சி மற்றும் பச்சை தத்துப்பூச்சி, குலை நோய், துங்ரோநோய், செம்புள்ளி மற்றும் இலை உறை அழுகல் நோய்களுக்கு மிதமான தாங்கும் திறன் கொண்டது. நல்ல அரவைத்திறன் மற்றும் முழு அரிசி காணும் திறனுடைய இந்த ரகத்தின் ஆயிரம் மணிகளின்  எடை 13.8 கிராம். இந்த ரகம் சமைத்தவுடன் பிபிடி5204 ரகம் போல இருப்பதால் விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிபிடிக்கு மாற்றாக பயிரிடப்படுகிறது. 
ஆந்திர மாநிலத்தில் இருந்து வெளியிடப்பட்ட சுவர்ணா, சம்பா மகசூரி, மேம்படுத்தப்பட்ட சம்பா மகசூரி, நெல்லூர் மகசூரி போன்ற ரகங்களும் பெருமளவு விவசாயிகளால் பயிரிடப்படுகிறது.
சுவர்ணா
சுவர்ணா அல்லது எம்.டி.யு 7029 என்ற ரகம் வசிஷ்டா மற்றும் மசூரி ஆகிய பெற்றோர்களை ஒட்டு சேர்த்து தேர்வு செய்யப்பட்ட இந்த ரகம், சுமார் 145 நாட்களில் 5.5 டன் விளைச்சல் தரவல்லது. இலைகள் கரும்பச்சையாகவும், உமி பழுப்பு நிறத்திலும் இருக்கும். களர் நிலங்களிலும் வளரும் தன்மை கொண்டது. மத்திம சன்ன நெல் இதன் மணிகளின் ஆயிரம் மணிகள் எடை 22.4 கிராம்.
பிபீடி 5204
145 முதல் வயதுடைய சம்பா மகசூரி என்றழைக்கப்படும் பிபீடி 5204 என்ற ரகம் ஜி இ பி 24, டீ (என்) 1, மசூரி ரகங்களை இனக்கலப்பு செய்து உருவாக்கப்பட்டது. நடுத்தர குட்டைப்பயிர் வெண்மையாக அரிசி, நடுத்தர சன்ன இரக தானிய அமைப்பைக் கொண்ட இந்த ரக மணிகளின் ஆயிரம் மணிகள் எடை 14.5 கிராம். இது காவேரி பாசனப்பகுதிகளில் சம்பா பட்டத்தில் அதிகம் பயிரிடப்படும் இரகங்களில் ஒன்றாகும். விவசாயிகள், நுகர்வோர்கள், வியாபாரிகள், அரவையாளர்கள் ஆகிய அனைவரின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய விரும்பத்தக்க குணாதியங்களைக் கொண்டது. குலை நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்டது.
மேம்படுத்தப்பட்ட பிபீடி 5204
பாக்டீரியல் இலைக்கருகல் நோய்க்கு எதிர்ப்பு தன்மை கொண்ட இந்த ரகம் கூடன் மார்க்கர் வழி தேர்வு என்ற முறையில் 3 விதமான பாக்டீரியா இலைக்கருகல் நோய் மரபணுக்களான ஓ 912, ஓ 913 மற்றும் ஓ 95 ஆகியவை புகுத்தப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்த ரகம் சம்பா மகசூரி மற்றும் எஸ் 1113 ஆகிய பெற்றோர்களை இனக்கலப்பு செய்து உருவாக்கப்பட்டது. இது பாக்டீரியா இலைக்கருகல் நோய் தாக்கும் இடங்களில் மற்ற ரகங்களை விட 15-30.1 கூடுதல் மகசூல் தரவல்லது. ஒரு எக்டருக்கு 4.75 முதல் 5 டன்கள் வரை தரவல்ல இந்த ரகத்தில் வயது 135-140 நாட்கள் ஆகும். இது பிபீடி 5204 போன்ற பயிர் வளர்ச்சி தன்மை மற்றும் நெல் மணிகளின் குணாதியங்களைத் தன்னகத்தே கொண்டது.
பருவத்திற்கு ஏற்ற நெல் பயிரில் ரகங்களை அறிந்த விவசாயிகள் தேர்வு செய்து விதைக்கும் ரகங்களின் தரம் அறிந்து விதைத்தால் அதிக மகசூல் பெறலாம். விதைகளின் புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன் மற்றும் பிற இரக விதைக் கலப்பு ஆகியவற்றை மிகத் துல்லியமாக அறிந்து கொள்ள விஜயபுரம், பெரியமில் தெரு, திருவாரூர் மாவட்டம் விதை பரிசோதனை நிலையத்தை அணுகி பயன் பெறலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com