Enable Javscript for better performance
மண்வளங்களைக் காக்க உயிரி உரங்களை பயன்படுத்த வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    மண்வளங்களைக் காக்க உயிரி உரங்களை பயன்படுத்த வேண்டும்

    Published on : 19th September 2019 12:58 AM  |   அ+அ அ-   |    |  

    agri



    நீடாமங்கலம்: மண் வளம் காக்க உயிரி உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என  நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் முனைவர் ராஜா.ரமேஷ், முனைவர் மு. ராமசுப்பிரமணியன் ஆகியோர் விவசாயிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
    இதுகுறித்து, அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  பயிர் சாகுபடியில் மிக அதிகமான ரசாயன உரங்களைப் பயன்படுத்தியதன் விளைவாக மண்ணின் வளம் பாதிப்படைந்ததோடு, மண்ணில் காணப்படும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது.
    பூமியின் மேற்புறத்திலுள்ள ஒரு கிராம் மண்ணில் 10 லட்சம் நுண்ணுயிர்களும், அடிப்பகுதியில் அதாவது பயிர்களின் வேர்பாகத்தில் 10 லட்சம் நுண்ணுயிர்களும் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். இந்த நுண்ணுயிர்களில் பயிருக்கு நன்மை தருபவற்றை கண்டறிந்து, அவற்றைப் பிரித்து, செயற்கை முறையில் அவை வாழ்வதற்கான சூழ்நிலையில் தயார் செய்து வழங்குபவைதான் உயிர் உரங்கள் என்றழைக்கப்படுகின்றன. 
    இந்த உயிரி உரங்களில் உள்ள பாக்டீரியாக்கள் காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து பயிருக்கு கிடைக்கச் செய்கிறது மற்றும் நிலத்திலுள்ள பயிர்களுக்கு கிடைக்காத மற்றும் கரையாத நிலையிலுள்ள மணிச்சத்தை கரைத்து பயிர்களுக்கு எளிதில் கிடைக்கும்படி செய்கின்றன.
    தழைச்சத்தை அளிப்பவை: அசோஸ்பரில்லம் லிப்போபெர்ம் -  இதை நெல் பயிருக்கு மட்டும் பயன்படுத்தவேண்டும். அசோஸ்பரில்லம் பிரேசிலேன்ஸ் இதை நெல் தவிர்த்து மற்ற வேர் முடிச்சு இல்லாத எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். 
    மணிச்சத்தை அளிப்பவை:  பாஸ்போ பாக்டீரியா பயிர் வளர்ச்சிக்குத் தேவைப்படும் சத்துகளில் முக்கிய பங்கு வகிக்கும் மணிச்சத்தை அளிக்கும். இதை எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இது நிலத்திலுள்ள பயிர்களுக்கு கிடைக்காத மற்றும் கரையாத நிலையிலுள்ள மணிச்சத்தை கரைத்து பயிர்களுக்கு எளிதில் கிடைக்கும்  நிலைக்கு  மாற்றி பயிர்கள் உட்கொள்ளும்படி செய்கிறது.
    விதை நேர்த்தி செய்தல்:  ஓர் ஏக்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட உயிரி உரங்களைத் தேவையான அளவு தண்ணீரில் கலந்து அதில் விதைகளை ஊறவைத்து பின்பு 30 நிமிடங்கள் நிழலில் உலர வைத்து, பின்பு 24 நேரத்துக்குள் விதைக்க வேண்டும் (தண்ணீருக்குப் பதிலாக குளிர்ந்த அரிசிக் கஞ்சியை ஒரு பாக்கெட்டுக்கு அரை லிட்டர் என்ற அளவிலும் பயன்படுத்தலாம்).
    நாற்றங்காலில் இடுதல்: ஓர் ஏக்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட உயிரி உரங்களுடன் ஒரு பாக்கெட்டுக்கு 5 கிலோ  நன்கு மக்கிய தொழுஉரம் மற்றும் இரண்டரை கிலோ மணல் என்ற விகிதத்தில் கலந்து நாற்றங்காலில் சீராக தூவ வேண்டும்.  
    நாற்றுகளின் வேரை நனைத்தல்: நாற்றங்காலின் ஒரு பகுதியில் சிறிய வரப்பு கட்டி தேவையான அளவு நீரைத் தேக்கி அதில் நான்கு பாக்கெட் உயிர் உரங்களைக் கரைத்து, அக்கரைசலில் நாற்றின் வேர்களை 30 நிமிடங்களுக்கு குறையாமல் நனைத்து பின்பு உடனடியாக நடவு செய்ய வேண்டும்.
    நேரடியாக வயலில் இடுதல்: ஓர் ஏக்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்ட நான்கு பாக்கெட் உயிரி உரங்களை 25 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் 10 கிலோ மணல் ஆகியவற்றுடன் கலந்து, நடவுக்கு முன்போ அல்லது பின்போ வயலில் சீராக தூவிவிட வேண்டும்.
    உயிரி உரங்களின் நன்மைகள்: வேர் வளர்ச்சி, தூர் வளர்ச்சி அதிகரிக்கிறது. உயிரி உரங்களைப் பயன்படுத்துவதன் வாயிலாக 25 சதவீதம் தழைச்சத்து மற்றும்  20 முதல் 25 சதவீதம் மணிச்சத்து சேமிக்கப்படுவதால் ரசாயன உரச் செலவு பெருமளவு குறைகிறது.  பயிர் ஊக்கிகளான இன்டோல் அசிட்டிக் அமிலம், ஜிப்ரலின் மற்றும் வைட்டமின் சத்துகளான பயோட்டின், விட்டமின் பி உற்பத்தி செய்யப்படுவதால் இளம்பயிர்கள் செழித்து வளர்ந்து எப்போதும் பசுமையாகக் காணப்படுகின்றன. விதைகளின் முளைப்புத்திறன், பயிர்களின் வளர்ச்சி மற்றும் பூப்பிடித்தல் போன்றவை அதிகரிக்கப்படுகிறது.
    காற்றிலுள்ள நைட்ரஜன் வாயுவை தழைச்சத்தாக மாற்றி பயிர்களுக்கு அளிக்கிறது. மண்ணில் கரையாத மணிச்சத்து பயிருக்கு எளிதில் கிடைக்கும் வகையில் நீரில் கரையும் தன்மையுள்ள மணிச்சத்தாக மாற்றப்படுகிறது. பயிர்களுக்கு வறட்சியைத் தாங்கும் சக்தியைக் கொடுக்கிறது. மண்ணின் ரசாயன மற்றும் பெளதீக பண்புகளை உயர்த்தி 20 முதல் 25 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கிறது.
    இவற்றை உபயோகிக்கும்போது மண்ணில் நன்மை செய்யும் பூஞ்சாண நோய்க் கொல்லிகள் உற்பத்தி செய்யப்படுவதால் நோயை எதிர்க்கும் சக்தி உருவாகிறது. சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படுவதில்லை.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai