ஒரு ஹெக்டேருக்கு 18 டன் மகசூல் தரும் செண்டுமல்லி...

ஆண்டு முழுவதும் பயிரிட ஏற்ற பூ ரகம் செண்டுமல்லி. பயிரிட்ட ஒரு ஹெக்டேரில் 18 டன் மகசூல் கிடைப்பதால் இது லாபமான பயிராகவும், உள்ளூர் சந்தையிலேயே அதிக விலை போகும் மலர்  ரகமாகவும் உள்ளது. 
ஒரு ஹெக்டேருக்கு 18 டன் மகசூல் தரும் செண்டுமல்லி...


அரக்கோணம்: ஆண்டு முழுவதும் பயிரிட ஏற்ற பூ ரகம் செண்டுமல்லி. பயிரிட்ட ஒரு ஹெக்டேரில் 18 டன் மகசூல் கிடைப்பதால் இது லாபமான பயிராகவும், உள்ளூர் சந்தையிலேயே அதிக விலை போகும் மலர்  ரகமாகவும் உள்ளது. 

செண்டுமல்லி மலர் விவசாயம் குறித்து சோளிங்கர் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர் வாசு தெரிவித்தது:   வேலூர் மாவட்டம், சோளிங்கர் வட்டாரப் பகுதிகளில் மலர் ரகங்களைப் பயிர் செய்வது அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் சோளிங்கரைச் சுற்றி காவேரிபாக்கம் வட்டாரத்திலும், மலர்  ரகங்கள்  நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்படுகின்றன.

செண்டு மல்லி ரகங்கள்: 

இதில் எம்.டி.யு 1, உள்ளூர் மஞ்சள், உள்ளூர் ஆரஞ்சு, பூசா நரங்கி கெய்ன்டா, பூசா பசந்தி கெய்ன்டா என 5 ரகங்கள் உள்ளன.

மண் மற்றும் தட்பவெப்பநிலை: நல்ல வடிகால் வசதியுடன் கூடிய அனைத்து வகை மண்ணிலும் பயிரிடலாம்.கார அமிலத் தன்மை 6.0 முதல் 7.5 சதவீதம் வரை இருப்பது அவசியம்.  களர் மற்றும் உவர் நிலங்கள் செண்டுமல்லி சாகுபடிக்கு ஏற்றதல்ல.  செண்டுமல்லி  ரகத்துக்கு, சீரான மித வெப்ப நிலை அவசியம். சமவெளிகளில் பயிரிடலாம். மலைப்பாங்கான இடங்களிலும் பயிரிடலாம். ஆண்டு முழுவதும் அனைத்துப் பருவங்களுக்கும் ஏற்ற மலர் ரகம் செண்டுமல்லி. 

செண்டு மல்லியைப் பயிரிட நிலத்தை நன்கு உழுது, கடைசி உழவின்போது, ஹெக்டேருக்கு 26 டன் மக்கிய தொழு உரம் இட வேண்டும். பின்னர் 75 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். ஹெக்டேருக்கு 1.5 கிலோ விதைகள் தேவைப்படும். ஆண்டு முழுவதும் பயிரிட ஏற்ற பயிராக இருந்தாலும் ஜூன், ஜூலை மாதங்கள் மிகவும் ஏற்றது.

நாற்றங்கால் தயாரித்தலில் நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது, கடைசி உழவின்போது மக்கிய தொழு  உரம் இட்டு மண்ணோடு நன்கு கலக்கிவிட வேண்டும்.  200 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதைகளை நேர்த்தி செய்த பிறகு, 15 செ.மீ. இடைவெளியில் விதைகளை வரிசையாகப் பாத்திகளில் விதைத்து, மண் கொண்டு மூடி உடன் நீர் பாய்ச்ச வேண்டும். ஏழாவது நாளே விதைகள் முளைத்து விடும். 30 நாள்கள் ஆனவுடன் நாற்றுகளைப் பிடுங்கி நடவு செய்ய வேண்டும்.

நடவின்போது வரிசைக்கு வரிசை 45 செ.மீ. செடிக்குச் செடி 30 செ.மீ. இடைவெளியில் நாற்றுகளை நட வேண்டும். வயதான நாற்றுகளைத் தவிர்த்து விட்டு, நல்ல வாளிப்பான ஒரு மாத வயதுடைய நாற்றுக்களையே நடவு செய்ய வேண்டும். செண்டுமல்லிக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முக்கியம். ஒரு ஹெக்டேருக்கு 45 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களைத் தேர்வு செய்து, அவற்றை அடியுரமாக இட வேண்டும். நட்ட 45 நாள்கள் கழித்து ஹெக்டேருக்கு 45 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரத்தை இட்டு மண்ணை அணைக்க வேண்டும். தேவைப்படும் போது கண்டிப்பாக களை எடுக்க வேண்டும்.

நட்டவுடன் தண்ணீரும், பிறகு மூன்றாம் நாள் உயிர்தண்ணீரையும் பாய்ச்ச வேண்டும். பிறகு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சுதல் அவசியம். நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும். நட்ட 30 நாள்களில் செடியின் நுனிப்பகுதி அல்லது முதல் பூ மொட்டுக்களைக் கிள்ளி எடுத்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் கிளைகள் அதிகம் தோன்றி அதிகமான பூ மொக்குகள் உண்டாகும்.

செண்டுமல்லி பயிரை பாதுகாத்தல் மிகவும் அவசியம். சிவப்பு சிலந்தி, இலைப்புள்ளி நோய், வேர்அழுகல் ஆகியவை ஏற்படலாம். சிவப்புசிலந்திகள் செடிகளின் இலைகள் மற்றும் பூக்களில் இருந்து சாற்றினை உறிஞ்சும். சேதம் அதிகமாகும்போது, பூக்கள் காய்ந்து விடும். இதனைக் கட்டுப்படுத்த கெலத்தேன் என்ற மருந்தினை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

இலைகளில் வட்டமான சிவப்பு நிறப்புள்ளிகள் தோன்றினால் அது இலைப்புள்ளி நோயாகும். பின்னர், இந்தப் புள்ளிகள் பெருகி இலைகள் கருகிவிடும். இதனைக் கட்டுப்படுத்த பெவிஸ்டின் 1 கிராம் மருந்தை, 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். வேர் அழுகல் நோய் வளர்ந்த செடிகளையும் நாற்றுகளையும் தாக்கும். இந்நோய் பாதித்தால் வேர் அழுகிவிடும். இதனைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு 7 கிராம் பெவிஸ்டின் மருந்து கலந்து செடியினைச்சுற்றி ஊற்றிவிட வேண்டும்.

இந்தச் செடியின் வயது 130 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஆகும். நடவு செய்த 60-ஆம் நாளில் இருந்து செடியில் செண்டுமல்லி பூக்கள் பூக்க ஆரம்பித்து விடும். 80 சதம் முதல் 90 சதம் வரை மலர்ந்த பூக்களை 3 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். ஒரு ஹெக்டேருக்கு 18 டன் பூக்கள் கிடைக்கும். மேலும், செண்டுமல்லி பூக்களை நாம் வசிக்கும் ஊருக்கு அருகில் உள்ள நகரப்பகுதிகளிலேயே சந்தைக்கு அனுப்பலாம். வருடம் முழுவதும் இப்பூவுக்குத் தேவை இருக்கும் என்றார் தோட்டக்கலை அலுவலர் வாசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com