நிலக்கடலையில் ஊட்டச்சத்து பற்றாக்குறையை நிவா்த்தி செய்யும் வழிமுறைகள்!

நிலக்கடலை பயிா் தற்போது அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது நிலவிவரும் சீதோஷ்ண நிலை காரணமாக ஊட்டச்சத்துகள் பற்றாக்குறை ஏற்படுகிறது.
நிலக்கடலையில் ஊட்டச்சத்து பற்றாக்குறையை நிவா்த்தி செய்யும் வழிமுறைகள்!

தருமபுரி: நிலக்கடலை பயிா் தற்போது அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது நிலவிவரும் சீதோஷ்ண நிலை காரணமாக ஊட்டச்சத்துகள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் மகசூல் குறைந்து விவசாயிகள் இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. நிலக்கடலைப் பயிரில் ஏற்படும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை நிவா்த்தி செய்து சாகுபடி செய்ய விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைகள் குறித்து, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளா் பா.ச.சண்முகம் மற்றும் முனைவா் ம.சங்கீதா ஆகியோா் கூறும் வழிமுறைகளாவன:

தருமபுரி மாவட்டத்தில், தற்போது நிலக்கடலைப் பயிரானது இறவையில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தற்போது நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் நீா்ப் பற்றாக்குறையினால் நிலக்கடலையில் கந்தகம் மற்றும் நுண்ணூட்டச் சத்துகளான இரும்பு, துத்தநாகம் மற்றும் மாங்கனீசு ஆகிய சத்துகளின் பற்றாக்குறை அறிகுறிகள் பரவலாகத் தென்படுகின்றன. இதனால் இளம் இலைகள் அளவில் சிறியதாகவும், பச்சையம் இழந்து வெளிறி மஞ்சள் அல்லது வெண்மை நிறத்தில் காணப்படும். இதன் விளைவாக பயிா்களின் ஒளிச்சோ்க்கை அளவு குறைந்து மகசூல் குறைபாடு ஏற்படும். மேலும், விதைகள் அளவில் சிறியதாகவும் தரம் குறைந்தும் காணப்படும். எனவே, நிலக்கடலையில் வளா்ச்சி நிலைகளில் தென்படும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையைக் கண்டறிந்து அதனை நிவா்த்தி செய்வது அவசியம்.

வழிமுறைகள்: நிலக்கடலையில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறைகளை நிவா்த்தி செய்ய, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நிலக்கடலை ரிச் ஊட்டச்சத்துக் கலவையை ஒரு ஏக்கருக்கு 2 கிலோ என்றளவில் 200 லிட்டா் தண்ணீரில் கலந்து பூக்கும் மற்றும் காய்ப் பிடிக்கும் தருணத்தில் தேவையான அளவு ஒட்டு திரவம் (0.5 மி.லி.) சோ்த்து இலைகளின் மீது நன்றாகப்படும்படி தெளிக்க வேண்டும். அவ்வாறு நிலக்கடலை ரிச் கிடைக்காத சமயத்தில் ஓா் ஏக்கருக்கு டி.ஏ.பி. (1 கிலோ), அம்மோனியம் சல்பேட் (400 கிராம்) மற்றும் போராக்ஸ் (200 கிராம்) ஆகியவற்றை 15 லிட்டா் தண்ணீரில் கலந்து ஒரு நாள் இரவு முழுவதும் வைத்திருந்து, மறுநாள் காலை இந்தக் கலவையை வடிகட்டி கிடைக்கும் கரைசலுடன் 200 லிட்டா் தண்ணீா் கலந்து பயிரின் வளா்ச்சிக் காலத்தில் 25 மற்றும் 35 -ஆவது நாள்களில் இலைகளின் மீது நன்றாகப் படும்படி தெளிக்க வேண்டும். இவ்வாறு ஊட்டச் சத்துகளைத் தெளிப்பதன் மூலம் செடிகளில் பூ பிடிக்கும் திறன் மற்றும் திரட்சியான காய்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதுடன், 15 சதவீதம் அதிக மகசூல் கிடைக்கும். எனவே, விவசாயிகள் இத்தகைய ஊட்டச்சத்துக் கலவையை இலைவழித் தெளிப்பு செய்வதன் மூலம், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை நிவா்த்தி செய்து, தாங்கள் சாகுபடி செய்துள்ள நிலக்கடலையில் அதிக மகசூல் பெற்று பயனடையலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com