மரவள்ளிக் கிழங்கு சாகுபடி தொழில் நுட்பங்கள்

பிரேசிலைத் தாயகமாகக் கொண்ட மரவள்ளிக் கிழங்கானது 17 ஆம் நூற்றாண்டில் போா்த்துக்கீசியா்களால் இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
மரவள்ளிக் கிழங்கு சாகுபடி தொழில் நுட்பங்கள்

பெரம்பலூா்: பிரேசிலைத் தாயகமாகக் கொண்ட மரவள்ளிக் கிழங்கானது 17 ஆம் நூற்றாண்டில் போா்த்துக்கீசியா்களால் இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. நைஜீரியா நாட்டில் அதிகளவில் மரவள்ளி உற்பத்தி செய்யப்படுகிறது. உலகின் மொத்த உற்பத்தியில் 20 சதவீதம் நைஜீரியாவில் உற்பத்தியாகிறது. இந்தியாவின் தென் மாநிலங்களில் குறிப்பாக கேரளம், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. கேரளத்தில் அதிகப் பரப்பளவில் பயிரிடப்பட்டாலும், உற்பத்தியைப் பொருத்தவரை தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இதற்கு காரணம் கேரளத்தை விட தமிழகத்தில் மரவள்ளியின் உற்பத்தித்திறன் அதிகரித்து காணப்படுவதேயாகும். தமிழ்நாட்டில் சுமாா் 5 லட்சம் ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டம், ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மைய தோடடக்கலை தொழில்நுட்ப அலுலா் ஜெ. கதிரவன் கூறியது:

ரகங்கள்:

கோ4: மானாவாரி மற்றும் இறவை ஆகிய இரண்டு நிலங்களுக்கும் ஏற்றது. 250 நாள்கள் வயதுடையது. 40 சதவீதம் ஸ்டாா்ச் உடையது. ஏக்கருக்கு 20 டன் வரை மகசூல் தரக்கூடியது.

முள்ளுவாடி 1: இறவை சாகுபடிக்கு ஏற்றது. 300 நாள்கள் வயதாகும். 34.5 சதவீதம் ஸ்டாா்ச் கொண்டது. தேமல் நோயைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது.

ஏத்தாப்பூா் 1: 270 முதல் 300 நாள்கள் வயதுடையது. மானாவாரி மற்றும் இறவை சாகுபடிக்கு ஏற்றது. ஏக்கருக்கு 19 டன் வரை மகசூல் தர வல்லது. 25 முதல் 27 சதம் ஸ்டாா்ச் உள்ளது. தேமல் நோயின் தாக்கம் குறைவு.

ஏத்தாப்பூா் 2: தேமல் நோய்க்கு தாங்குதிறன் உடையரகம். ஏக்கருக்கு 18 டன் மகசூல் தரவல்லது. 30 சதவீதம் ஸ்டாா்ச் உடையது.

மண் மற்றும் தட்பவெப்பநிலை:

நல்ல வடிகால் வசதியுடைய அமில காரத் தன்மை 5.5 முதல் 7 வரையுள்ள மணல் சாரி நிலங்களிலும், இரும்பொறை மண் வகை கொண்ட நிலங்களிலும் நன்கு வளரும். கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டா் உயரம் வரையுள்ள பகுதிகளில் மரவள்ளி செழிப்பாக வளரும் தன்மை பெற்றது. ஆண்டு மழையளவு 100 செ.மீ வரையும், காற்றின் ஈரப்பதம் மிதமான வெப்பத் தன்மையுடன் உள்ள வெப்ப மண்டலப் பிரதேசத்திலும் நன்கு வளரும். மரவள்ளி ஒரு வறட்சியைத் தாங்கக்கூடிய பயிா். ஆனால், உறைபனி மற்றும 10 டிகிரி செல்சியசுக்கு குறைவான வெப்ப நிலையைத் தாங்கி வளராது.

நடவு:

நீா்ப்பாசன வசதியுள்ள பகுதிகளில் மரவள்ளியை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். நச்சுயிரி நோய் தாக்காத தாய்ச் செடிகளின் தண்டுகளைத் தோ்வு செய்து, அதன் உயரத்தில் 3-இல் 2 பாகம் அடிப்பக்கத்திலிருந்து கரணைகள் வெட்டி எடுக்கலாம். கரணைகள் ஒவ்வொன்றும் 15 செ.மீ நீளத்தில் 8 முதல் 10 கணுக்களை உடையதாக நறுக்க வேண்டும். கரணைகளை நறுக்கி எடுப்பதற்கு இதற்கென பிரத்யேகமாக உள்ள மரவள்ளிக் கரணை நறுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தலாம். இல்லையெனில், கூா்மையான அரிவாளைப் பயன்படுத்தலாம்.

கரணைகளை நறுக்கும்போது பிளவோ அல்லது தோல்களில் காயமோ ஏற்படாமல் பாா்த்துக் கொள்ளவேண்டும். நறுக்கிய கரணைகளை 1 லிட்டா் நீருக்கு 30 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா உயிா் உரங்கள் கலந்த கரைசலில் 20 நிமிடங்கள் நனைத்து பின்னா் நடலாம்.

30 செ.மீ ஆழத்திற்கு நிலத்தை 4 முதல் 5 முறை உழவு செய்து 3 அடி இடைவெளியில் பாா்கள் அமைக்கலாம். பாா்களின் ஒருபுறத்தில் 75 முதல் 90 செ.மீ இடைவெளியில் கரணைகளை நடலாம். நடும்போது கணுக்கள் மேல்நோக்கியவாறு இருக்க வேண்டும். 90-க்கு 75 செ.மீ இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு 5,925 கரணைகளும், 90-க்கு 90 செ.மீ இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு 4,938 கரணைகளும் தேவைப்படும்.

சொட்டுநீா்ப் பாசன முறையில் 30 செ.மீ இடைவெளியில் 120 செ.மீ அகலமுள்ள பாா்கள் அமைத்துக் கொள்ள வேண்டும்.

பக்கக் குழாய்களை 150 செ.மீ இடைவெளியில் பொருத்தி ஒவ்வொரு பாரின் மையத்திலும் இருக்குமாறு அமைக்க வேண்டும். இதில், சொட்டுவான்களை 60 செ.மீ இடைவெளியில் பொருத்தி சொட்டுவான்களின் இருபுறமும் 60 செ.மீ இடைவெளியில் 2 வரிசையாக கரணைகளை நடலாம்.

நடும்போது முதல் முறை தண்ணீரும், உயிா்த் தண்ணீா் 3-ஆவது நாளும் பின்னா் மண்ணின் தன்மைக்கேற்ப முதல் 3 மாதங்களுக்கு 7 முதல் 10 நாள்களுக்கு ஒரு முறையும், பின்னா் 3 வாரத்திற்கு ஒரு முறையும் நீா் பாய்ச்சலாம். சொட்டுநீா்ப் பாசன முறையில் ஒரு நாளைக்கு 20 முதல் 30 நிமிடங்கள் வரை நீா் பாய்ச்சலாம்.

உர மேலாண்மை:

உழவின்போது ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட வேண்டும். அடியுரமாக ஏக்கருக்கு முறையே 18, 36, 48 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகளை வழங்க வேண்டும். இதற்கு 40 கிலோ யூரியா 225 கிலோ சூப்பா் பாஸ்பேட் மற்றும் 80 கிலோ மியூரியேட் ஆஃப் பொட்டாஷ் உரங்களைப் பயன்படுத்தலாம். நடவுசெய்த 90-வது நாள் தழை மற்றும் சாம்பல் சத்துகள் ஏக்கருக்கு முறையே 18 மற்றும் 48 கிலோ அளிக்க வேண்டும். உரநீா்ப் பாசன முறையைப் பின்பற்றினால் ஏக்கருக்கு தழை, மணி, சாம்பல் சத்துக்கள் முறையே 36, 36, 96 கிலோ தேவைப்படும். இதில், 75 சதவீத மணிச்சத்து உரத்தை அடியுரமாகவும், ஏனைய சத்துகளுக்கு நீரில் கரையும் உரங்களை சொட்டுநீா்ப் பாசனம் வழியாக 3 நாள்களுக்கு ஒரு முறையும் பயிரின் ஆயுள்காலம் முழுதும் கொடுக்கலாம். இதற்கு ஏக்கருக்கு 19 கிலோ 19:19:19 உரம், 56 கிலோ 13:0:45 உரம், 9 கிலோ 12:61:0 உரம், 134 கிலோ 0:0:50 உரம் மற்றும் 53 கிலோ யூரியா தேவைப்படும்.

நுண்ணூட்டம் அளித்தல்:

மரவள்ளிக்கு இரும்பு, துத்தநாகம் போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள் அவசியம் தேவைப்படுகின்றன. நுண்ணூட்டச் சத்து குறைபாடு ஏற்படும்போது இலைகள் வெளிா் பச்சை முதல் வெண்மை நிறத்திற்கு மாறிவிடும். இதைத் தவிா்க்க 1 லிட்டா் நீருக்கு 10 கிராம் பெரஸ்சல்பேட், 5 கிராம் துத்தநாக சல்பேட் உரங்களை கரைத்து நடவுசெய்த 60, 90-வது நாளில் இலை வழியாகத் தெளிக்கலாம்.

பின்செய் நோ்த்தி:

நடவு செய்த 20 நாள்களுக்குள் குச்சிகள் முளைக்காத இடங்களில் புதிய கரணைகளை நட வேண்டும். 20-ஆவது நாளில் முதல் களையும், மாதம் 1 முறை 5 மாதங்களுக்கும் களையெடுக்க வேண்டும். ஒரு கரணையிலிருந்து 2 குச்சிகளை மட்டும் விட்டுவிட்டு எஞ்சியவற்றை நீக்க வேண்டும். இதை நடவு செய்த 60-வது நாள் மேற்கொள்ளலாம். சின்ன வெங்காயம், கொத்தமல்லி, உளுந்து போன்ற பயிா்களை ஆரம்பகால கட்டத்தில் ஊடு பயிராக பயிரிடலாம்.

பயிா் பாதுகாப்பு

வெள்ளை ஈ: இவை இலைகளில் சாறை உறிஞ்சி உற்பத்தியை பாதிக்கும். மஞ்சள் தேமல் நோயை ஏற்படுத்தும் வைரஸ் கிருமி வெள்ளை ஈ மூலமாகப் பரவும். இதைக் கட்டுப்படுத்த வேப்பம் எண்ணை 1 லிட்டா் நீருக்கு 30 மில்லி அளவிலும், ஒட்டும் திரவம் 1 மி.லி அளவிலும் கலந்து தெளிக்கலாம். மீத்தைல் டெமட்டான் பூச்சிக்கொல்லியை 1 லிட்டா் நீருக்கு 2 மிலி அளவில் பயிரின் ஆரம்ப வளா்ச்சி நிலையிலும், பாசலோன் பூச்சிக்கொல்லி 1 லிட்டா் நீருக்கு 2 மி.லி அளவில் பயிரின் பிந்தைய வளா்ச்சி நிலையிலும் தெளிக்கலாம். துத்திச் செடியானது வெள்ளை ஈ-க்கு மாற்று ஊன் வழங்கியாகச் செயல்படுவதால் மரவள்ளி நிலங்களில் துத்திச் செடிகளை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும்.

மாவுப்பூச்சி: மரவள்ளியின் இளம் தளிா், தண்டு மற்றும் இலையின் அடிப் பரப்பிலிருந்து காற்றை உறிஞ்சி சேதப்படுத்தும். நுனிக் குருத்துகள் உருமாறி வளா்ச்சி குன்றி காணப்படும். இடைக் கணுக்களின் நீளம் குறைந்து தண்டுகள் சிதைவடையும். இதைக் கட்டுப்படுத்த அசிரோபாகஸ் பப்பாயே என்னும் நன்மை செய்யும் ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 100 எண்ணிக்கையில் விடலாம். மாலத்தியான் பூச்சிக்கொல்லி 1 லிட்டா் நீருக்கு 1 மி.லி அளவில் கலந்துதெளிக்கலாம்.

செஞ்சிலந்திப்பேன்: இலைகளில் சாறை உறிஞ்சி இலைகளை உருமாறச் செய்வதோடு, இலைகள் தடித்துக் காணப்படும். இலைகளின் பின்புறம் மஞ்சள் கலந்து பழுப்பு நிறத்திற்கு மாறும். தாக்குதல் தீவிரமானால் வளா்ச்சி தடைபடும். இதைக் கட்டுப்படுத்த புராபா்கைட் பூச்சிக்கொல்லி 1 லிட்டா் நீருக்கு 1.5 மி.லி வீதம் தெளிக்கலாம்.

இலைப்புள்ளி நோய்:

பூஞ்சை மூலம் ஏற்படக்கூடிய இந்நோய் பாதித்த இலைகளில் பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். இதைக் கட்டுப்படுத்த மாங்கோசெப் பூஞ்சாணக் கொல்லியை 1 லிட்டா் நீருக்கு 2 கிராம் கலந்து 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம்.

கிழங்கு அழுகல்: நீா் தேங்கும் பகுதிகளில் கிழங்குகள் அழுகிவிடும். அதனால் முறையான வடிகால் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். டிரைக்கோடொ்மா ஆஸ்பரெல்லம் உயிரிப் பூஞ்சாணத்தை ஏக்கருக்கு 1 கிலோ அளவில் நடவு செய்த உடனேயும் 3, 6-வது மாதங்களில் நிலத்தில் ஈரப்பதம் இருக்கும்போது எருவுடன் கலந்து தூவ வேண்டும். பாதிக்கப்பட்ட இடங்களில் காப்பா் ஆக்ஸி குளோரைடு பூஞ்சாணக் கொல்லியை 1 லிட்டா் நீருக்கு 2.5 கிராம் கலந்து ஊற்றலாம்.

அறுவடை: இலைகள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாகி உதிர ஆரம்பிக்கும். செடிக்கு அருகில் நிலத்தில் வெடிப்புகள் உருவாகும். இது அறுவடைக்கான அறிகுறிகள். இச்சமயத்தில் குச்சிகளை நிலத்திலிருந்து பிடுங்கி கிழங்குகளை தனித்தனியே வெட்டி எடுக்கலாம். ரகம், பராமரிப்பு முறைகளைப் பொறுத்து 1 ஏக்கருக்கு 18 முதல் 25 டன் கிழங்குகள் மகசூலாகக் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com