சின்ன வெங்காயப் பயிரில் ஈ தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை

தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயப் பயிரில், வெங்காய ஈ தாக்குதல் பரவலாகத் தென்படுவது குறித்து ஹேன்ஸ் ரோவர்
சின்ன வெங்காயப் பயிரில் ஈ தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை


பெரம்பலூர்: தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயப் பயிரில், வெங்காய ஈ தாக்குதல் பரவலாகத் தென்படுவது குறித்து ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ஜெ. கதிரவன், ஆலத்தூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆனந்தன், உதவி தோட்டக்கலை அலுவலர் தேவராஜன் ஆகியோர் ஆலத்தூர், இரூர் ஆகிய கிராமங்களில் வயல்வெளி ஆய்வு மேற்கொண்டனர்.  

இந்த ஆய்வின்போது, சில வயல்களில் வெங்காய ஈ தாக்குதல் இருப்பதை கண்டறிந்து, அதைக் கட்டுப்படுத்த வேளாண் அலுலர்கள் கூறிய ஆலோசனை:
டேலியா ஆன்டிகுவா என்னும் அறிவியல் பெயர் கொண்ட வெங்காய ஈ உருவத்தில் வீட்டு ஈ போல இருக்கும். இவை தனது முட்டைகளை இலைகள், குமிழங்கள் அல்லது குமிழத்துக்கு அருகிலிருக்கும் மண் மீது இடும். இவை 3 முதல் 8 நாள்களில் பொரித்து புழுவாக வெளிவரும். இவற்றிற்கு கால்கள் கிடையாது. புழுக்கள் வேர்பாகத்திலிருந்து குமிழங்களைக் குடைந்து தாள்பாகம் வரை வரும். ஒரு குமிழத்தை பல புழுக்கள் குடைந்து செல்லும்.  புழுப்பருவம் 20 நாள் வரையிலிருக்கும். பின்னர் கூட்டுப்புழுவாக மண்ணுக்குள் இருக்கும்.  
பாதிப்புக்குள்ளான வெங்காயச் செடிகளின் தாள்கள் மஞ்சள் நிறமாக மாறி செடிவாடும். இவற்றைப் பிடுங்கிப் பார்த்தால் குமிழங்கள் அழுகிக் காணப்படும். குமிழங்களுக்குள் புழுக்கள் கூட்டமாகக் காணப்படும். பொதுவாக இதன் பாதிப்பு குமிழங்கள் உருவாகும் தருணத்தில் அதிகம் இருக்கும்.

பாதிப்புக்குள்ளான குமிழங்களில் துளைகளை ஏற்படுத்தி விடுவதால், குமிழங்கள் அழுகிப் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிடும். இப்புழுக்கள் அடுத்தடுத்த குமிழங்களைத் தாக்குவதால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும்.  

இவற்றைக் கட்டுப்படுத்த வயலைத் தொடர்ந்து கண்காணித்து பாதிக்கப்பட்ட செடிகளைப் பிடுங்கி எரித்துவிட வேண்டும். புழுக்களால் ஏற்படும் காயம் காரணமாக பாக்டீரியா தாக்குதலுக்குள்ளாகி குமிழங்கள்அழுகிவிடும். ஈக்கள் மஞ்சள் நிறத்தால் ஈர்க்கப்படும் தன்மைகொண்டது. எனவே, ஈக்களைக் கவர்ந்து அழிக்க மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி ஏக்கருக்கு 10 வைக்கலாம். 
ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் பயிரின் எஞ்சிய பாகங்கள் அனைத்தையும் வயலை விட்டு அப்புறப்படுத்த வேண்டும்.

குளிர்ச்சியான, ஈரப்பதமான சூழலில் புழுக்கள் உற்பத்திக்கு சாதகமாகவும், வெப்பமான வறண்ட சூழல் பாதகமாகவும் இருக்கும். நிலத்தில் நன்கு மக்காத எரு அதிகளவில் இடுதலை தவிர்க்கவேண்டும். எருவிட்ட நிலங்களில் நன்கு மக்கிய பின்னரே நடவுசெய்ய வேண்டும். தொடர்ந்து வெங்காயம் பயிரிடுவதைத் தவிர்த்து மாற்றுப்பயிர் சாகுபடி முறையைப் பின்பற்ற வேண்டும்.
அசாடிராக்டின் பூச்சிக்கொல்லியை 1 லிட்டர் நீருக்கு 3 மி.லி அளவில் கலந்து தெளிப்பதன் மூலம் ஈக்களை வயலிலிருந்து விரட்டலாம். குளோர்பைரிபாஸ் 20 ஈ.சி. ரசாயனப் பூச்சிக்கொல்லி ஒரு லிட்டர் நீருக்கு 3 மி.லி அளவில் கலந்து நிலத்தில் படுமாறு தெளித்து, குளோர் பைரிபாஸ் 10 ஜி குருணை மருந்தை ஏக்கருக்கு 5 கிலோ அளவில் நிலத்திலிட்டு நீர்ப்பாய்ச்சி புழுக்களைக் கட்டுப்படுத்தலாம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com