தமிழக விவசாயிகளுக்குப் பொங்கல் பரிசாக 13 புதிய பயிர் ரகங்கள்: வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது

தமிழக விவசாயிகளுக்குப் பொங்கல் பரிசாக 13 புதிய பயிர் ரகங்களை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
 தமிழக விவசாயிகளுக்குப் பொங்கல் பரிசாக 13 புதிய பயிர் ரகங்கள்: வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது


தமிழக விவசாயிகளுக்குப் பொங்கல் பரிசாக 13 புதிய பயிர் ரகங்களை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
 இது தொடர்பாகப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 தமிழக விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர, அவர்களின் தேவையை அறிந்து ஆண்டுதோறும் பல புதிய பயிர் ரகங்களை வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2020-ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசாக 7 வேளாண்மைப் பயிர்கள், 6 தோட்டக்கலைப் பயிர்கள் என மொத்தம் 13 புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 நெல் - கோ 53: இது தமிழ்நாட்டின் வறட்சி பாதிப்புக்குள்ளாகும் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களுக்கு ஏற்ற ரகம். வறட்சி, பகுதியளவு வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய இது குறுகிய கால (115 - 120 நாள்கள்) ரகமாகும். மானாவாரி நேரடி விதைப்புக்கு ஏற்றது. இந்த ரகத்தின் சராசரி நெல் மகசூல் ஹெக்டேருக்கு 3,866 கிலோ. இது வறட்சியைத் தாங்கி வளருவதுடன், மேட்டூர் அணை திறப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டாலும் பயிரிட ஏற்ற ரகமாகும்.

நெல் - ஏடீடி 54: இது அதிக மகசூல் தரக் கூடிய, அதாவது ஹெக்டேருக்கு சராசரியாக 6,307 கிலோ நெல் தரக் கூடிய மத்திய கால (130 - 135 நாள்கள்), வெள்ளை மத்திய சன்ன அரிசி ரகமாகும். அதிக அரவைத் திறன் (72.3 சதவீதம்) கொண்ட இது, பின் சம்பா, தாளடி பருவங்களுக்கு ஏற்றது.
கரும்பு - கோ.க. 13339: இந்தப் புதிய ரக கரும்பு 330 - 360 நாள்களில் முதிர்ச்சியடைந்து ஹெக்டேருக்கு அதிகபட்ச மகசூலாக 141.60 டன் கரும்பும், 18.20 டன் சர்க்கரையும் கொடுத்துள்ளது. நடுப்பட்டம், பின்பட்டத்துக்கு ஏற்ற ரகம். கடந்த 20 ஆண்டுகளாகப் பயிரிடப்படும் கோ 86032 ரகத்துக்கு மாற்றாக இது வெளியிடப்பட்டுள்ளது.
பருத்தி - கோ 17: இது 130 நாள்களில் முதிர்ச்சி அடைந்து ஹெக்டேருக்கு 2,504 கிலோ விதைப் பருத்தி மகசூலாகக் கிடைக்கிறது. ஒரே சமயத்தில் காய்கள் முதிர்வடைதல், செடிகள் அதிக கிளைகள் இல்லாமலிருத்தல், குறுகிய காய்ப் பிடிக்கும் கிளைகள் போன்றவை இதன் சிறப்பம்சங்களாகும். தமிழ்நாட்டின் நெல் தரிசு, குளிர்கால மானாவாரி, கோடைக்கால நீர்ப்பாசன பகுதிகளுக்கு ஏற்றது. மேலும் இது அடர் நடவு முறைக்கும், இயந்திர அறுவடைக்கும் ஏற்ற ரகமாகும்.

உளுந்து - வம்பன் 11 (வி.பி.எண்.11): இது மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்ட புதிய உளுந்து ரகமாகும். இதன் வயது 70 - 75 நாள்களாகும். ஆடி, புரட்டாசி, மார்கழி, சித்திரை என 4 பட்டங்களிலும் பயிரிடலாம். மானாவாரியில் ஹெக்டேருக்கு 865 கிலோவும், இறவையில் 940 கிலோவும் மகசூல் கொடுக்கவல்லது.

சோளம் - கோ 32: இந்த ரக சோளம், மானாவாரியில் தானிய மகசூலாக ஹெக்டேருக்கு 2,445 கிலோவும், உலர் தட்டை மகசூலாக 6,490 கிலோவும் கொடுக்கவல்லது. தானியம் அதிக புரதச்சத்தும் (14.6 சதவீதம்), அதிக நார்ச்சத்தும் (5.80 சதவீதம்) கொண்டது. மானாவாரி, இறவையில் தமிழ்நாடு முழுவதிலும் பயிரிடலாம்.

தினை - ஏ.டி.எல். 1: இந்த தினை ரகம் ஹெக்டேருக்கு 2,117 கிலோ தானியம், 2,785 கிலோ தட்டு ஆகியவற்றை மகசூலாகக் கொடுக்கவல்லது. இது குழந்தைகள், கர்ப்பிணிகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்யப் பயன்படுகிறது. குறைந்த செலவில் இருமடங்கு வருவாய் கொடுக்கவல்லது.
வாழை - கோ 2 (வீரிய ஒட்டு): கோ 2 வீரிய ஒட்டு ரக வாழை, நெய்பூவன் போன்று தோற்றத்தில் இருக்கும். ஹெக்டேருக்கு 32 டன் மகசூல் கொடுக்கும். நூற்புழு, வாடல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டது.
தக்காளி - கோ 4 (வீரிய ஒட்டு): இந்தப் புதிய ரக தக்காளி பயிரில், காம்பை ஒட்டிய பகுதி பழுக்கும்போது பச்சை நிறம், இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதால் தக்காளியை அதிக தூரம் எடுத்துச் செல்லவும், அதிக நாள்கள் சேமிக்கவும் பயன்படும். நீண்ட நாள்களுக்கு அதிக மகசூல் தரவல்ல இந்த ரகம், ஹெக்டேருக்கு 92.30 டன் மகசூல் கொடுக்கவல்லது. பழங்களில் அமிலத்தன்மையும் அதிகம் இருக்கும்.

சின்ன வெங்காயம் - கோ 6: இந்த வகை சின்ன வெங்காயம், குமிழ்கள், விதை உற்பத்தி செய்ய ஏற்ற ரகமாகும். குமிழ் மகசூலாக ஹெக்டேருக்கு 19.10 டன் கிடைக்கும். விதை மகசூலாக ஹெக்டேருக்கு 300 கிலோ கிடைக்கும். அதிக நாள்களுக்கு சேமித்து வைக்கலாம். ஆனால் தற்போது பயிரிடப்பட்டு வரும் கோ 5 ரகம், குறைவான சேமிப்புத் திறனே கொண்டது. இந்தப் புதிய ரகம், பெரம்பலூர், நாமக்கல், கடலூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கு ஏற்றது.
மரவள்ளி - ஒய்.டி.பி. 2: இந்த மரவள்ளி ரகம் ஹெக்டேருக்கு 46.20 டன் கிழங்குகளை மகசூலாகக் கொடுக்கவல்லது. இதில் 30 சதவீத மாவுச்சத்து உள்ளது.

கொடுக்காபுளி - பி.கே.எம். 2: இந்த ரகம் ஆண்டுதோறும் சீராகக் காய்த்து, அதிகபட்சம் ஒரு மரத்துக்கு 90 கிலோவும், ஒரு ஹெக்டேருக்கு 13.50 டன் பழங்களையும் மகசூலாகக் கொடுக்கவல்லது. இடுபொருள்கள் குறைந்த அளவே போதுமானது. வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. பழங்கள் சத்துகள் நிறைந்தவை. பழத்தின் வெளிப்புறத்தோல் இளஞ்சிவப்பு நிறத்திலும், சதைப்பகுதி சிவப்பு நிறத்திலும் இருக்கும். தமிழ்நாட்டின் களர், உவர் நிலங்கள், மானாவாரி நிலங்களுக்கு ஏற்ற ரகம்.
மணத்தக்காளி - கோ 1: மணத்தக்காளி கோ 1 ரகம் கீரை மகசூலாக ஹெக்டேருக்கு 30 - 35 டன்கள் கொடுக்கவல்லது. வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஊட்டச்சத்து மிகுந்த கீரையாகவும், மருந்துத் தன்மைக்காகப் பயன்படுத்தவும் உகந்தது. வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டங்களிலும் வளர்க்க உகந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com