உளுந்து சாகுபடியில் உயரிய தொழில்நுட்பம்...

உளுந்து இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் முக்கியமான பருப்பு வகைகளில் ஒன்றாகும். இப்பயிர் வளி மண்டலத்திலுள்ள தழைச்சத்தை தன் வேர் முடிச்சுகள் மூலம் மண்ணுக்கு அளித்து
உளுந்து சாகுபடியில் உயரிய தொழில்நுட்பம்...

பெரம்பலூர்: உளுந்து இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் முக்கியமான பருப்பு வகைகளில் ஒன்றாகும். இப்பயிர் வளி மண்டலத்திலுள்ள தழைச்சத்தை தன் வேர் முடிச்சுகள் மூலம் மண்ணுக்கு அளித்து அதன் வளத்தை மேம்படுத்துகிறது. உளுந்தில் அதிக புரதச்சத்து உள்ளது. இப்பயிரானது 25 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வளரக்கூடியது. பயிர் முதிர்ச்சி அடையும் காலம் வறண்ட காலமாக இருந்தால், அதிக மகசூல், தரமான விதைகள் கிடைக்கும்.
 இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர் சு. திவ்யா கூறியது:
 நிலத்தை தேர்ந்தெடுத்தல்: விதை உற்பத்திக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வயல் முந்தைய ஆண்டுகளில் பயறுவகை செடிகளைச் சாகுபடி செய்யாத வயலாக இருக்க வேண்டும். பயறுவகை பயிர்கள் அல்லது உளுந்துப் பயிரை தொடர்ந்து பயிரிடும்போது, வயல்கள் வேரழுகல் அல்லது வாடல் நோய்க் கிருமிகளைக் கொண்டிருக்கலாம்.
 வெளியிடப்பட்ட புதிய ரகங்கள்: வம்பன் -6, 8, 11 போன்ற ரகங்கள் வேளாண் பல்கலைக் கழகம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புச் சக்தி கொண்ட ரகமாக விளங்குகிறது.
 பருவம், விதை அளவு: ஜனவரி 3-வது வாரம் முதல் பிப்ரவரி 2-வது வாரத்திற்குள் விதைக்கலாம். சராசரியாக ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதை போதும்.
 விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்க டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் 10 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்யலாம். அல்லது கார்பண்டாசிம் (அ) திரம் 2 கிராம் ஒரு கிலோ விதையுடன் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்கலாம். பயனுள்ள ரைசோபியம் பாக்டீரியாக்களை ரசாயன பூசண மருந்துடன் கலக்கக் கூடாது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் உருவாக்கப்பட்ட ரைசோபியம் 3 பாக்கெட் (600 கிராம் ஹெக்டேர்) மற்றும் தாவர வளர்ச்சி ஊக்கி பாக்டீரியாக்கள் 3 பாக்கெட் (600 கிராம் ஹெக்டேர்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட் (600 கிராம் ஹெக்டேர்) உடன் ஆறிய அரிசி கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
 மேலும், உயிர் உரங்கள், துத்தநாகம், மாலிப்டினம், கோபால்ட் போன்ற நுண்ணூட்டச் சத்துகள் கொண்டு விதைக்கு மேல்பூச்சு செய்யலாம். ஒரு கிலோ விதைக்கு 0.5 கிராம் பயன்படுத்த வேண்டும்.
 விதைப்பு: விதைகளை 30 -10 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும். நெல் தரிசில் பயிரிடுவதாக இருந்தால், அறுவடைக்கு 5 முதல் 10 நாள்கள் இருக்கும்போது விதைகளை தூவும்போது, மண்ணில் ஈரப்பதம் சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். வரப்பின் ஓரங்களில் பயிரிடுவதாக இருந்தால் 30 செ.மீ இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும்.
 இலைவழித் தெளித்தல்: வறட்சி காலத்தில் இடைப்பருவ மேலாண்மை முறையாக 2 சதவீத பொட்டாசியம் குளோரைடு 100 பி.பி.எம். போரான் பரிந்துரைக்கப்படுகிறது. ராபி பருவத்தில் பொட்டாசியம் குளோரைடு தெளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்.
 தழைச்சத்துக்கு மாற்றாக உயிர்ம ஆதாரங்கள்: 50 சதவீத நைட்ரஜனுக்கு மாற்றாக உயிர்ம ஆதாரம் (ஏக்கருக்கு 850 கிலோ மண்புழு உரம்) பயறு வகை பயிர்களில் கார அமிலத் தன்மை 6.0-க்கும் குறைவான மண்ணில் சுண்ணாம்பு அளிக்கலாம்.
 நீர் நிர்வாகம்: விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு உயிர் தண்ணீர் 3-வது நாளிலும் பாய்ச்ச வேண்டும்.
 காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப 10 முதல் 15 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் கட்ட வேண்டும். பயிரின் அனைத்து நிலைகளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துளிர்க்கும் பருவத்தில் வறட்சி இருந்தால் 0.5 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைகளில் தெளிக்க வேண்டும்.
 களை மேலாண்மை: மென்டிமெதலின் 3.3 லிட்டர் ஹெக்டேருக்கு நீர்ப்பாசன நிலையிலும், மானாவாரி சாகுபடியில் 2.5 லிட்டர் ஹெக்டேர் 500 லிட்டர் தண்ணீருடன் சேர்ந்தும் பயன்படுத்தலாம். களைக்கொல்லிகள் பயன்படுத்தாவிட்டால் விதைத்த 15- 30 நாள்களில் கையால் களை எடுக்க வேண்டும்.
 ஊட்டச்சத்து மேலாண்மை: பயறு வொண்டரில் பேரூட்டச்சத்து மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளதால் வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது. இதை 2 முறை பூக்கும் சமயத்திலும், 15 நாள்கள் கழித்தும் ஏக்கருக்கு 2 கிலோவை 200 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து தெளிக்கவும். இதை பயன்படுத்துவதால் வறட்சியைத் தாங்கி வளரவும், பூ உதிர்வைத் தவிர்க்கவும், 10- 20 சதம் மகசூல் அதிகரிக்கவும் பயன்படுகிறது.
 பூச்சி, நோய் மேலாண்மை: 5 வகையான காய்த் துளைப்பான்கள் உளுந்து பயிரைத் தாக்கக்கூடும். அவை பச்சை காய்த் துளைப்பான், புள்ளி காய் துளைப்பான், முள் காய்த் துளைப்பான், நீல வண்ணத்துப்பூச்சி, புல் நீல வண்ணத்துப்பூச்சி, காய்ப் புழுக்களில் முக்கியமாக பச்சைக் காய்ப்புழுவான (ஹெலிகோவர்பா ஆர்மிஜிரா) மற்றும் புள்ளிகாய்ப் புழு (மருகா விட்ரேடா) மருகாவகை காய்ப்புழு பூக்கள் மற்றும் காய்களை நூலாம்படைகொண்டு பின்னச் செய்யும். பின்பு மொட்டுகள், காய்கள், இலைகளை துளையிட்டு சேதத்தை ஏற்படுத்தும். தட்ப வெப்பநிலை மாறும் சமயம் சாம்பல் நோய் தாக்க வாய்ப்புண்டு. சாம்பல் நோய் தாக்கிய செடியின் இலைகள் சாம்பல் நிறம் படிந்து காணப்படும். இதைக் கட்டுப்படுத்த புரப்பிகோனாசோல் பூஞ்சாணக் கொல்லி மருந்தை லிட்டருக்கு 1 மில்லி கலந்து தெளிக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com