குயில் கூவும், காக்கை கரையும், புறா குழுமும், கிளி பேசும் என ஒவ்வொன்றின் ஒலி வெளிப்பாடும் ஒரு குறிப்பிட்ட வினைபெறும். இவற்றில் காக்கை கரையும் என்பது ஆழமாய் எண்ணுதற்குரியது. கா, கா, என்பதால் காக்கை எனப் பொதுப்படக் கூறுவர். இந்தக் காக்கை ஏன் கா கா எனக் கரைகிறது?
'காக்கை தன்னைக் கா என்று காப்பாற்றச் சொல்லும்'' என்பர் புரட்சிக் கவிஞர். மனோன்மணியம் சுந்தரனார், 'இருள் என்று கருதித் தன்னையும் சூரியன் காய்வானோ என்று நினைத்துத் தன் பெயரைக் கா கா என்னைக் கா என்று கூறிப் பறக்கிறது'' என்கிறார்.
கா என்பது கருமையென்றும் பண்புப் பெயரடியாகும். கருமையானது என்ற பொருளில் காக்கை எனப் பெயர் வந்தது. கரைதல் என்பதற்குக் கூப்பிடுதல், அழைத்தல் என்பது பொருள். கலங்களைத் தன்னை நோக்கி அழைப்பது கலங்கரை விளக்கமெனக் கருதலாம்.
காக்கை கரவா கரைந்துண்ணும்; ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள (527)
எனக் காக்கை தன் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும் என்பர் திருவள்ளுவர்.
கரை என்னும் வினையடி நீரில் பிறபொருள் கரைதலைக் குறிக்கும். திடப் பொருள் இளகி உருவற்றுப் போதலே கரைதல் எனப்படும். உள்ளம் கரைதல் என்பது உள்ளம் அன்பினால் இளகுதலைக் குறிக்கும். அன்னப் பறவை தன் பேடை உள்ளம் இளகுமாறு அழைத்தலை மதுரைக்காஞ்சி கூறுகின்றது.
வேட்கோவர் மண்பாண்டங்களைச் சுடுவதற்கு முன் வெயிலில் காய வைப்பர். சிலபோது மழை தோன்றிப் பசுங்கலங்கள் கரைந்து போகும். அது போலச் சிலர் உள்ளங்கள் நல்ல அறிவுரைகளை வாங்கி வைத்துக் கொள்வதில்லை என்று குறுந்தொகை கூறுகின்றது. "பெயல்நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல' (குறுந்.27) என்பது மிகப்பொருந்துகிறது. உள்ளம் கரையாத கடினத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும்; கரைகிற தன்மை உடையதாகவும் இருக்க வேண்டும். மண் கட்டி மழைநீரில் கரைகிறதே என்று கவலைப்படுகிறான் சங்கப் புலவன். அன்பு, காதல், இரக்கம், பரிவு, முதலான பண்புகளோடு குரல் நயம்பட அழைப்பதைக் "கரைதல்' எனச் சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன.
பெரும்பாலும் கரைதல் என்பதைப் பறவைகளுக்குரிய வினையாகக் காட்டும் சங்க இலக்கியம் அதனை எருமைக்கும் உரியதாகக் கூறக் காணலாம். கழார்க் கீரன் எயிற்றியார் என்னும் சங்கப் புலவர் தலைவி ஒருத்தியின் தனிமை கொள்ளும் இரவை மிக அழகாகச் சித்தரிக்கிறார்.
இரவுக் காவலர் ஒவ்வொரு நாழிகையையும் தவறாது நாழிகை வட்டிலைக் கூர்ந்து நோக்கி இரவின் நேரக் கணக்கைப் பார்ப்பது போலவும், அவர்கள் துயிலாது இருப்பது போலவும் நானும் காலத்தைக் கணக்கிட்டுக் கொண்டு இரவெல்லாம் துன்பமுறுகின்றேன்.
இந்தக் கார்கால இரவுப்பொழுதில் கொட்டிலில் சேற்றுத்தரையில் நிற்பதை வெறுக்கும். கரகரத்த குரலில் கரையும் என்று கூறுவதில் எருமை கரைவது கூறப்படுகிறது. அன்னம் கரையும், மயில் கரையும், எருமை கரையும் இவையெல்லாம் தம் துணை கருதிக் கரையும்; அல்லது வெறுப்பும் துன்பமும் உறுதலால் கரையும்.
காக்கை கரைவதென்பது வேறு. அது கூட்டாக உண்ணும் கருத்திற் கரையும். தன் இனத்தை உண்ண வருக என்றழைக்கும் ஒப்புரவு காக்கையிடம் உள்ளது. பழந்தமிழர் குடும்ப வாழ்வு இத்தகைய ஒப்புரவு உடையதே.
புலவர் ஒருவரின் படைப்பில், "காக்கையே! விருந்துவர நீ கரைதல் ஈடற்ற ஒப்புரவு' என்னும் பொருளில் இசைக்கக் காணலாம். சிறந்த வள்ளலாகிய நள்ளியின் காட்டில் ஆயர்களுக்குரிய பல பசுக்கள் அளித்த நெய்யில் வெந்த சோற்றை ஏழு பெரிய கலங்களில் கொடுத்தாலும் இந்தக் காக்கை கரைந்த செயலுக்கு ஈடாகாது. ஏனென்றால், என் தலைவியின் அன்புக்குரிய காதலனாகிய விருந்தினன் வருமாறு கரைந்தது இந்தக் காக்கை என்கிறாள்.
திண்தேர் நள்ளி கானத்து அண்டர்
பல்ஆ பயந்த நெய்யில், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்நெல் வெம்சோறு,
ஏழுகலத்து ஏந்தினும் சிறிது, என் தோழி
பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு,
விருந்து வரக்கரைந்த காக்கையது பலியே.
(குறுந்தொகை-210)
இந்தப் பாடலைப் பாடிய புலவரின் பெயர் தெரியவில்லை . எனவே நூலைத் தொகுத்தவர்கள் "காக்கை பாடினியார்' என்று பெயரிட்டு அப்புலவரைப் போற்றினர். காக்கை கரைந்தால் வீட்டுக்கு விருந்து வரும் என்பது பண்டைக் காலத்து நம்பிக்கையாகும். தாய் ஒருத்தி, தன் மகள் காதலனோடு உடன்போக்காகப் போன நிலையில், "காக்கையே! என் மகள் தன் காதலனுடன் இங்கு மீண்டு வருமாறு கரைதலைச் செய்க. செய்வாயெனில் நான் உனக்கு உன் சுற்றத்தோடு உண்ணப் புலால் கலந்த உணவைத் தருவேன்' என்கிறாள்.
காக்கை நிறம் இனிதென்றார் பாரதியார்; காக்கையின் கரைதல் இனிய பண் என்கிறது பராசக்தி படப்பாட்டு.