பெங்களூர், டிச. 26: ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் தோல்விக்கான காரணத்தை கண்டறிய வல்லுநர் குழுவை இஸ்ரோ அமைக்கவுள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சனிக்கிழமை விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தோல்வியில் முடிந்தது. இதற்கான காரணத்தை அறிய நாட்டின் மூத்த விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இக்குழு விஞ்ஞானிகள் மற்றும் ராக்கெட்டு கட்டுப்பாட்டு அறைக்கு இடையே நடந்த தகவல்பரிமாற்றங்களை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. எனினும், இதுபற்றி விரிவாக ஆராய்ந்து, அறிக்கை சமர்பிக்க வல்லுநர் குழுவை அமைக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
இதுபற்றி இஸ்ரோ செய்தி தொடர்பாளர் எஸ்.சதீஷ் கூறுகையில், ஜிஎஸ்எல்வி ராக்கெட் தோல்விக்கான காரணத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். ஓரிரு நாள்களில் வல்லுநர் குழு அமைக்கப்படும் என்றார்.ஏப்ரல் 15 மற்றும் டிசம்பர் 25 ஆகிய நாள்களில் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி தோல்வியடைந்துள்ளது இஸ்ரோ விஞ்ஞானிகளை மிகவும் சோர்வில் ஆழ்த்தியுள்ளது.