தும்கூர், ஜூலை 3: தும்கூர் நகை அடகு கடையில் நடந்த கொள்ளையில் அதே நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்து 15 கிலோ தங்க நகை மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கத்தை போலீஸôர் பறிமுதல் செய்தனர்.
தும்கூர் மாவட்டம், பாவகடா காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் நகை அடகு கடையில் கடந்த ஜூன் 26-ம் தேதி பரிசோதனை அதிகாரிகள் என்று காவலாளியிடம் கூறி உள்ளே நுழைந்தவர்கள் அங்கிருந்த 15 கிலோ தங்கநகை மற்றும் ரூ. 6 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளையர்கள் குறித்த அடையாளம் அங்கிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. இது குறித்து வழக்கு பதிந்த பாவகடா போலீஸôர், ஹாசன் மாவட்டம் அரக்கல்கூடுவை சேர்ந்த ஹரீஸ் (22), முக்தேஷ் (21), புனித் (22) மற்றும் சோமவார் பேட்டையைச் சேர்ந்த ஹிருத்திக் (23) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 15 கிலோ தங்கநகை மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கத்தை போலீஸôர் பறிமுதல் செய்தனர்.
இதில் ஹரீஸ், முக்தேஷ் அதே நிறுவனத்தின் கணக்கு தணிக்கையாளர்களாம். புனித் தும்கூர் கிளையில் பணிபுரிபவராம். இவர்கள் 3 பேரும் ஹிருத்திக்குடன் திட்டமிட்டு கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடித்த பாவகடா போலீஸôரை தும்கூர் எஸ்பி சுரேஷ் பாராட்டி, ரொக்கப்பரிசு வழங்க உள்ளதாக தெரிவித்தார்.