ஹாவேரி, ஜூலை 3: அரசியல் சார்பில்லாதவர் லோக்பால் பதவிக்கு நியமிக்கப்படுவதை நாடாளுமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்று பெஜாவர் மடாதிபதி விஸ்வேஷ தீர்த்த சுவாமிகள் தெரிவித்தார்.
உடுப்பிக்கு செல்லும் வழியில் ஹாவேரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஜனலோக்பால் சட்டமசோதாவை வகுக்கும்போது, அரசியல் சார்பில்லாதவர் லோக்பால் பதவிக்கு நியமிக்க நாடாளுமன்றம் வழிவகை செய்ய வேண்டும். அதேபோல, ஒருநபர் மட்டும் லோக்பால் பதவிக்கு நியமிக்கக்கூடாது. மாறாக, லோக்பால் குழு நியமிக்கப்பட வேண்டும். பிரதமர் மற்றும் இந்திய தலைமை நீதிபதியை லோக்பால் சட்டவரம்புக்குள் கொண்டுவர வேண்டும். ஆனால், லோக்பால் சட்டமசோதாவை நாடாளுமன்றம் முழுமையாக விசாரிக்க வேண்டும்.
இந்தியாவில் நாடாளுமன்றம் தான் உயர்ந்தது. நாடாளுமன்றம் எடுக்கும் முடிவை அண்ணா ஹசாரே தலைமையிலான சமூகக்குழு உள்பட அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: தொழிற்சாலை அமைப்பதற்காக விவசாய விளைநிலங்களை கையகப்படுத்தும் மாநில அரசின் நடவடிக்கையை கடுமையாகக் கண்டிக்கிறேன். தரிசு நிலங்களில் தொழிற்சாலை அமைக்கலாமே தவிர, எந்த சூழ்நிலையிலும் விளைநிலங்களை கையகப்படுத்தக்கூடாது. வேளாண்மை மற்றும் தொழில்களுக்கு மாநில அரசு சமவாய்ப்பு அளிக்க வேண்டும். சாலை மற்றும் அணை கட்டுவதற்கு தேவையான நிலம் தவிர, கூடுதல் நிலங்களை அரசு கையகப்படுத்தக்கூடாது. உழவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் எந்த முடிவையும் ஏற்க முடியாது.
உண்ணாவிரதம்: முதல்வர் எடியூரப்பா உறுதியளித்தப்படி, மங்களூர் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக கையகப்படுத்தி ஒதுக்கியுள்ள 2,035 ஏக்கர் நிலத்தை விடுவித்து அரசு ஆணை பிறப்பிக்க தவறினால், ஜூலை 12ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் என்றார்.