ராம்நகர், ஜூலை 3: சொத்து தகராறு காரணமாக மாமியாரைக் கொன்று மருமகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
ராம்நகர் மாவட்டம், சென்னப்பட்டனா தாலுகா, முகுந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். விவசாயியான இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புனிதா (30) என்பவருடன் திருமணம் நடந்தது. தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு சொத்து பிரிப்பது சம்பந்தமாக மாமியார் லட்சுமியம்மாவுக்கும், புனிதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனால் மாமியார் லட்சுமியம்மாள் தனியாக சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு சொத்து பிரிப்பது தொடர்பாக லட்சுமியம்மா மற்றும் புனிதாவுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் சென்று படுத்துத் தூங்கியுள்ளனர். நள்ளிரவு விழித்துக் கொண்ட புனிதா மாமியார் மீது ஆத்திரம் அடைந்து இரும்பு தடியால் தலையில் அடித்துள்ளார். இதில் லட்சுமியம்மா அதே இடத்தில் இறந்துள்ளார். சத்தம் கேட்டு விழித்த ராஜேஷ் அலறி அடித்துக் கொண்டு வெளியே சென்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து வருவதற்குள், புனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து எம்.கே. தொட்டி போலீஸôர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
சம்பவ இடத்தை எஸ்.பி. பீசனஹள்ளி மற்றும் டிஒய்எஸ்பி சித்தப்பா ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.