பெங்களூர், ஜூலை 9: தன் குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சிபிஐ வசம் ஒப்படைக்க வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தை முன்னாள் முதல்வர் குமாரசாமி சனிக்கிழமை தொடங்கினார்.
மாநிலம் முழுவதும் அவருக்கு ஆதரவாக மஜத தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் பெங்களூர், ஹாசன், ராமநகரம் ஆகிய மாவட்டங்களில் சட்டவிரோதமாக ரூ.1500 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக பாஜக அண்மையில் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக, ஒரு கையேட்டையும் வெளியிட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்த குமாரசாமி, குற்றச்சாட்டுகளை சிபிஐ வசம் ஒப்படைக்கக் கோரினார்.
ஆனால் இதற்கு மாநில அரசு செவி சாய்க்காததால், கோரிக்கையை வலியுறுத்தி பெங்களூர், சுதந்திரப் பூங்காவில் சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். முன்னதாக ஆனந்தராவ் சதுக்கத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.
அவருடன் எம்பி செலுவநாராயணசாமி, எம்எம்ஏக்கள் பண்டேப்பூர் காஷெம்பூர், ஜமீர் அகமது உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பட்டினிப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
போராட்டத்தின்போது, புத்தர், லால்பகதூர் சாஸ்திரி, தந்தை பெரியார், மகாத்மா காந்தி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களையும், ராமாயணத்தையும் குமாரசாமி படித்துக் கொண்டிருந்தார்.
முன்னாள் அமைச்சர் பி.ஜி.ஆர். சிந்தியா, முன்னாள் முதல்வர் எஸ். பங்காரப்பா, பிஹார் மாநில ஐக்கிய ஜனதாதள எம்பி பண்டர் கோஸ்வால் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் குமாரசாமியைச் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
மாலையில், சோர்வாக காணப்பட்ட குமாரசாமியின் ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை இதய மருத்துவ நிபுணர் டாக்டர் நாகேஷ் பரிசோதித்தார்.
குமாரசாமிக்கு ஆதரவாக மைசூர், மண்டியா, ஷிமோகா, சிக்மகளூர், ராமநகரம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மஜத தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.