பெங்களூர், ஜூலை 14: நிலமோசடி தொடர்பாக தனக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முதல்வர் எடியூரப்பா வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஷிமோகாவை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிராஜின்பாஷா மற்றும் பால்ராஜ் ஆகியோர் அளித்த மனுக்களின் அடிப்படையில், நிலமோசடி தொடர்பாக முதல்வர் எடியூரப்பா மீது சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ், ஜனவரி 21-ம் தேதி அனுமதி அளித்தார். இதை எதிர்த்து முதல்வர் எடியூரப்பா சார்பில் அவரது வழக்கறிஞர் சந்தீப்பாட்டீல் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ஆளுநரின் அனுமதி அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும்.