பெங்களூர், ஜூலை 14: விவசாயிகள் விரும்பாதவரை போஸ்கோ தொழிற்சாலை அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கதக் மாவட்டத்தில் கட்டாயப்படுத்தி விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது. தரிசு நிலங்களை தாமாக முன்வந்து அளிக்க விரும்பினால் மட்டுமே, போஸ்கோ ஸ்டீல் தொழிற்சாலை அமைக்கப்படும். ஒருவேளை நிலத்தை அளிக்க விவசாயிகள் மறுத்தால், இத்திட்டம் வேறு இடத்துக்கு மாற்றப்படும்.
எந்த காரணத்துக்காகவும் விவசாயிகளின் நிலத்தை கட்டாயப்படுத்தி கையகப்படுத்த மாட்டோம்.
விவசாயிகளின் பெயரில் பதவிப் பிரமாணம் எடுத்து கொண்ட நான், விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்பட மாட்டேன்.
விவசாயிகள் விரும்பி நிலம் அளித்தால் மட்டுமே அந்த மாவட்டங்களில் தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதனால், நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், தர்னாக்கள் நடத்த வேண்டாம்.
விவசாயிகளின் நலனைப் புறக்கணித்து தொழிற்சாலைகளை அமைக்க அரசு விரும்பவில்லை. கதக் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணியை உடனடியாக நிறுத்துமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.