பெங்களூர், பிப். 10: சட்டப்பேரவையை 10 நாள்களுக்கு நடத்த முடியாதது வேதனை அளிக்கிறது என்று முதல்வர் சதானந்த கெüடா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: சட்டப்பேரவையை திட்டமிட்டப்படி 10 நாள்களுக்கு நடத்த முடியாமல்போனது வேதனையளிக்கிறது. குறிப்பாக கடைசி 2 நாள்கள் சட்டப்பேரவையை நடத்த முடியாமல் போனது என் மனதை வாட்டியெடுத்து விட்டது. 20 நாள்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் உள்பட 45 நாள்கள் சட்டப்பேரவையை நடத்த வேண்டுமென்பது என் விருப்பம்.
கடந்த நவம்பரில் 10 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தினோம். ஆனால், அண்மையில் நடைபெற்ற கூட்டத்தொடர் 10 நாள்கள் நிறைவு செய்ய முடியாமல் போனது.
விரைவில் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் அர்த்தமுள்ளதாக அமையும். 20 நாள்கள் சட்டப்பேரவை இயங்கும் என்று நம்புகிறேன். வளர்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.