பள்ளிப்பாடங்களை காவிமயமாக்க பாஜக அரசு முயற்சி

பெங்களூர், பிப். 10: பள்ளிப்பாடங்களை காவிமயமாக்க பாஜக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாக முற்போக்கு சிந்தனையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணைய முன்னாள் தலைவர் சி.எஸ்.துவாரக
Published on
Updated on
1 min read

பெங்களூர், பிப். 10: பள்ளிப்பாடங்களை காவிமயமாக்க பாஜக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாக முற்போக்கு சிந்தனையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணைய முன்னாள் தலைவர் சி.எஸ்.துவாரகநாத், சுதந்திரப்போராட்ட தியாகி எச்.எஸ்.துரைசாமி, முன்னாள் எம்எல்சி ஏ.கே.சுப்பையா ஆகியோர் கூட்டாக பெங்களூரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை இதை தெரிவித்தனர்.

காவிமயமாக்குவதற்கு ஆதாரமாக அரசு தயாரித்துள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பாடநூல்களை துவாரகநாத் செய்தியாளர்களிடம் காட்டினார்.

பின்னர் அவர் கூறுகையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தத்துவங்களை பிஞ்சு உள்ளங்களில் நஞ்சாக பதிய வைக்க பாஜக அரசு பாடநூல்களை காவிமயமாக்கியுள்ளது.

சமூக அறிவியல் பாட நூலில் பிரிக்கப்படாத இந்திய வரைப்படத்தில் இந்து கோயில்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அதேபோல கர்நாடகத்தில் இருக்கும் இந்து மடங்களின் அருமை பெருமைகளை சுட்டிக்காட்டி, அதையும் வரைபடத்தில் சேர்த்துள்ளனர்.

ராணிசென்னம்மா மற்றும் முஸ்லிம் அரசர் ஹைதர் அலிக்கும் இடையே நடந்த போரை நூலில் வர்ணிக்கும்போது, சென்னம்மாவுக்கு எதிராக எதிரி வென்றான் என்று குறிப்பிட்டுள்ளனர். ஹைதர் அலி வென்றார் என்று குறிப்பிட தவறியுள்ளனர்.

பாகிஸ்தான், வங்கதேசத்தை இந்தியா என்று காட்டியுள்ளதோடு, இந்து மதம் தவிர வேறு மதத்தின் வழிபாட்டுத் தலங்களை வரைபடத்தில் குறிப்பிடவே இல்லை. பெங்களூரில் இயங்கி வரும் இஸ்கான் கோயில் பற்றியும் நூலில் குறிப்பு உள்ளது.

இஸ்கான் கோயில் மாணவர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்குவதாக பாடநூலில் கூறியுள்ளனர். மேலும் நூலை எழுதியது யார் என்ற விவரமே தரப்படவில்லை என்றார்.

ஏ.கே.சுப்பையா கூறுகையில், இந்த பாடநூல்களுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவதோடு சட்டரீதியான நடவடிக்கையிலும் ஈடுபடுவோம்.

பாடநூல் தயாரிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்துக்கு பதில் பாஜக அரசு பஞ்சாங்கம் அல்லது மதத்தை சார்ந்துள்ளது. இது நமது நாட்டின் மதசார்பின்மைக்கு எதிரானது. புதிய பாடநூல்களை எவ்வகையிலும் மாணவர்களுக்கு விநியோகிக்க அனுமதிக்கமாட்டோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.