பெங்களூர், பிப். 10: யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை பிரபலப்படுத்த அரசு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று முதல்வர் சதானந்த கெüடா தெரிவித்தார்.
கர்நாடக ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதித்துறை சார்பில் பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆரோக்கிய கண்காட்சி மற்றும் கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து அவர் பேசியது:
உலக மக்களுக்கு இந்தியா அளித்த கொடைதான் யோகா. இயற்கை மருத்துவம் மற்றும் யோகா, மருந்தில்லாத பாதுகாப்பான மருத்துவ நடைமுறையாகும். சமுதாய நலனுக்காக இதை பிரபலப்படுத்த வேண்டியது அவசியம்.
அண்மைக்காலமாக இந்திய பாரம்பரிய மருத்துவமுறைகளுக்கு உலக அளவில் தேவை உருவாகியுள்ளது. நமது வாழ்க்கைமுறை, உணவு பழக்கம், அழுத்தம் நிறைந்த வாழ்க்கை, வேதிப்பொருள் கலந்த அதிகப்படியான மருந்து உள்கொள்ளல், எல்லா வகையான மாசு ஆகியவை சேர்த்து உடல்நலனை சீரழித்துள்ளது. இதை சீரமைக்க யோகா தான் ஒரேவழி.
தினசரி வாழ்க்கையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மகத்துவத்தை உணர்ந்துள்ள அரசு, இதை மக்களிடையே பிரபலமாக்க தொடர்ந்து ஊக்கம் அளிக்க தீர்மானித்துள்ளது.
மைசூரில் யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி அமைத்துள்ளோம்.
மாநிலத்தின் 10 தாலுகா மருத்துவமனைகளில் தனியார் பங்களிப்புடன் யோகா மற்றும் இயற்கை மருத்துவமனைகளை திறந்துள்ளோம். இதை எல்லா மாவட்டங்களிலும் விரிவாக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.