சுடச்சுட

  

  கூடுதலாக 94 ஆம்புலன்ஸ்  வாகனங்கள் இயக்கப்படும்:  அமைச்சர் யு.டி.காதர்

  By  பெங்களூரு  |   Published on : 04th November 2013 11:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடகத்தில் இலவச ஆம்புலன்ஸ் வாகன சேவைத் திட்டத்தின் கீழ், கூடுதலாக 94 வாகனங்கள் இயக்கப்படும் என்று, அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் யு.டி.காதர் தெரிவித்தார்.
   பெங்களூருவில் அண்மையில் நடைபெற்ற அவசர மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஊழியர் சங்க மாநாட்டில் அவர் பேசியது:
   கர்நாடகத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் 517 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகின்றன.
   இவற்றில் 150 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மாற்றப்படும். பழைய வாகனங்களுடன் கூடுதலாக 94 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேர்க்கப்படும். இதன்மூலம், மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கை 661-ஆக உயரும்.
   70 ஆயிரம் பேருக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் என்ற இலக்கை அடைய அரசு முயற்சித்து வருகிறது. ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்களுக்கும், அதன் உரிமையாளருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால், இந்தாண்டு ஜூலை- ஆகஸ்ட் மாதத்தில் ஆம்புலன்ஸ் வாகன சேவை பாதிக்கப்பட்டது.
   பொதுமக்கள் சேவையில் ஆர்வம் குறையாமல் இவர்கள் பணியாற்ற வேண்டும். ஊழியர்களின் பிரச்னை தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
   கடந்த 5 ஆண்டுகளில் இலவச ஆம்புலன்ஸ் வாகன சேவைத் திட்டத்தில் 25.2 லட்சம் அவசரச் சிகிச்சை நோயாளிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில், 85,720 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
   குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனத்தின் உதவியுடன் 29,626 குழந்தைகள் பிறந்துள்ளன.
   ஆம்புலன்ஸ் வாகனங்களை போல, ஆம்புலன்ஸ் இரு சக்கர வாகன சேவையைத் தொடங்க அரசு ஆலோசித்து வருகிறது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.
   இதைத் தவிர்க்கவே, ஆம்புலன்ஸ் இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai