Enable Javscript for better performance
ஹாக் அதிநவீன ஜெட் விமானம்:  இந்திய கப்பல் படையில் சேர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஹாக் அதிநவீன ஜெட் விமானம்:  இந்திய கப்பல் படையில் சேர்ப்பு

    By  பெங்களூரு,  |   Published on : 07th November 2013 10:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்துஸ்தான் வானூர்தி தொழில்சாலை (எச்.ஏ.எல்.) நிறுவனம் தயாரித்த ஹாக் அதிநவீன ஜெட் விமானம் இந்திய கப்பல் படையில் சேர்க்கப்பட்டது.
     இதுகுறித்து பெங்களூருவில் எச்.ஏ.எல். நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     இந்தியாவின் சொந்த தொழில்நுட்பத்தில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட ஹாக் அதிநவீன ஜெட் பயிற்சி விமானத்தை எச்.ஏ.எல். நிறுவனம் வடிவமைத்து தயாரித்தது. விசாகப்பட்டினம், ஐ.என்.எஸ்.தேகாவில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் ஹாக் அதிநவீன ஜெட் பயிற்சி விமானத்தை கப்பல் படை ஊழியர் தலைவர் அட்மிரல் டி.கே.ஜோஷி இந்திய கப்பல் படையில் அதிகாரப்பூர்வமாக இணைத்தார்.
     இதுதொடர்பாக விழாவில் ஜோஷி பேசியது:
     இந்திய கப்பல் படையின் தேவைகளை நிறைவு செய்வதில் ராணுவ பொதுத் துறை நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்கும். இந்தியாவின் சொந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஹாக் பயிற்சி விமானம் பெருமைப்படக் கூடிய முயற்சியாகும் என்றார் அவர்.
     எச்.ஏ.எல். நிறுவனத் தலைவர் ஆர்.கே.தியாகி பேசியது:
     நமது நாட்டுக்காகவும், ராணுவத்திற்காகவும் உழைக்க எச்.ஏ.எல்.உறுதியான நடையை எடுத்து வைக்கும். ஹாக் அதிநவீன ஜெட் பயிற்சி விமானம் மட்டுமல்ல, இந்திய கப்பல் படையின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யத் தயாராக உள்ளோம் என்றார் அவர்.
     ஹாக் அதிநவீன ஜெட் பயிற்சி விமானத்தில் இரு இருக்கைகள் உள்ளன. விமானத்தில் ஒரு ரோல்ஸ்ராய்ஸ் அடோர் எம்.கே.871 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. விமானிகளுக்கு அடிப்படை, அதிநவீன மற்றும் ஆயுதங்களைக் கையாளும் பயிற்சி அளிப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.
     எனினும், தரைவழித் தாக்குதல் அல்லது வான்வழித் தற்காப்பு தாக்குதலுக்கும் இந்த விமானத்தைப் பயன்படுத்தலாம். வானில் பறப்பதில் தனித்தன்மை வாய்ந்த திறன் கொண்டுள்ள இந்த விமானம், இரவிலும் பறக்கும் திறன் கொண்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai