சுடச்சுட

    

    தனியார் நிறுவனங்கள் உதவியுடன் அரசுப் பள்ளிகள் மேம்படுத்தப்படும்

    By பெங்களூரு,  |   Published on : 08th November 2013 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று, அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.

    இதுகுறித்து பெங்களூருவில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியில் பள்ளி மாணவர்களுக்கு சீருடை, மதிய உணவு, குழந்தைகளுக்கான சுற்றுலா ஆகியவை செயல்படுத்தப்பட்டன. ஆனால், முந்தைய பாஜக ஆட்சியில் இந்தத் திட்டங்களை நேரடியாக செயல்படுத்துவதற்குப் பதிலாக, ஒப்பந்த அடிப்படையில் அமல்படுத்தினர். இதனால், நிகழாண்டில், அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி ரூ. 150 கோடி முதல் ரூ. 200 கோடி அளவுக்கு மத்திய அரசு குறைத்துவிட்டது.

    இதனால், நிகழாண்டில் சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்த இயலவில்லை. அடுத்த கல்வியாண்டில் இது சரிசெய்யப்படும். கர்நாடகத்தில் 50 ஆயிரம் அரசுப் பள்ளிகள் உள்ளன.

    முதல் கட்டமாக இவற்றில் 6 ஆயிரம் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்தப் பணியில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த திட்டம் வகுத்துள்ளோம்.

    அடுத்தாண்டு ஜனவரி முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். கிராமப் பஞ்சாயத்துகளுக்கு ஒரு பள்ளி வீதம், தலா ரூ. 30 லட்சம் முதல் ரூ. 40 லட்சத்தில் அரசுப் பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக மேம்படுத்தப்படும். நூலகம், சோதனைக் கூடம், விளையாட்டு அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்தப் பள்ளிகளில் உருவாக்கப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai