சுடச்சுட

    

    பாஜகவில் மீண்டும் சேரும் பேச்சுக்கே இடமில்லை என்று, கர்நாடக முன்னாள் முதல்வரும், கஜக தலைவருமான எடியூரப்பா தெரிவித்தார்.

    கர்நாடகத்தில் திருமண நிதியுதவித் திட்டத்தை அனைத்து சமூகத்தையும் சேர்ந்த ஏழைப் பெண்களுக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தி, பெங்களூரு ஆனந்த ராவ் சதுக்கத்தில் தொடர் தர்னாவில் ஈடுபட்டு வரும் எடியூரப்பா, சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

    பாஜகவில் மீண்டும் நான் சேரப் போவதாக சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். பாஜகவில் மீண்டும் என்னை சேர்த்துக் கொள்வதற்காக சிலர் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனாலும், பாஜகவில் மீண்டும் நான் சேரப் போவதில்லை.

    மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து திட்டமிட்டு வருகிறேன். கர்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 10 அல்லது 12 தொகுதிகளில் கர்நாடக ஜனதா கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.

    மக்களவைத் தேர்தலின் போது, பாஜகவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ள கஜக விரும்புகிறது. ஆனால், பாஜகவுடன் கஜகவை இணைக்கும் வாய்ப்பு இல்லை.

    திருமண நிதியுதவித் திட்டத்தை அனைத்து சமூகத்தையும் சேர்ந்த ஏழைப் பெண்களுக்கும் விரிவுபடுத்தும்வரை எனது போராட்டம் ஓயாது.

    வருகிற 24-ஆம் தேதி வரை இந்த தொடர் தர்னா போராட்டம் தொடரும். பின்னர், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இந்த பிரச்னையை எழுப்புவேன் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai