Enable Javscript for better performance
மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்ற கர்நாடக அரசு தயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்ற கர்நாடக அரசு தயக்கம்

    By பெங்களூரு,  |   Published on : 10th November 2013 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமல்படுத்த அந்த மாநில எதிர்க்கட்சிகள், இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், அந்தச் சட்டத்தை அமல்படுத்த அரசு தயக்கம் காட்டுகிறது.

    முற்போக்குச் சிந்தனை கொண்டவரான முதல்வர் சித்தராமையா, மகாராஷ்டிர மாநிலத்தைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டிருந்தார். இதுகுறித்து அறிக்கை அளிக்க சமூக சிந்தனையாளர்கள் கொண்ட குழுவை அமைத்திருந்தார்.

    இந்தக் குழு தனது அறிக்கையை அண்மையில் முதல்வர் சித்தராமையாவிடம் ஒப்படைத்தது.

    இதைப் பெற்றுக் கொண்ட முதல்வர் சித்தராமையா, வருகிற 25-ஆம் தேதி முதல் பெல்காமில் தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார்.

    இந்த நிலையில், அந்தச் சட்டத்துக்கு மஜத, பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தொடர்பான விவாதம் மாநிலம் முழுவதும் நடைபெற்றது.

    இந்தச் சட்டத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தன.

    இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜனார்தன பூஜாரி, இந்தச் சட்டத்தை அமலாக்க எதிர்ப்பு தெரிவித்தார்.

    சட்டப்பேரவை குளிர்கால கூட்டத் தொடரில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்ட மசோதாவை தாக்கல் செய்வதாக கூறியிருந்த முதல்வர் சித்தராமையா, தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றிக் கொண்டுள்ளதோடு, இதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.

    இதுதொடர்பாக பெங்களூருவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் சித்தராமையா பேசியது:

    மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை. அதற்குள், சட்டப்பேரவை குளிர்கால கூட்டத் தொடரில் இந்தச் சட்ட மசோதாவை தாக்கல் செய்வதாக ஊடகங்கள் முடிவு செய்து செய்தி வெளியிட்டுள்ளன.

    அவசரகதியில் இந்தச் சட்ட மசோதா தாக்கல் செய்யும் பேச்சுக்கே இடமில்லை. மூடநம்பிக்கைகளுக்கு தடை விதிக்கும் நோக்கில், சமூகச் சிந்தனையாளர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள் அடங்கிய குழுவினர் அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.

    அவர்களிடம் அறிக்கையை பெற்றுக் கொண்டதால், அவர்களின் பரிந்துரையை கண்மூடித்தனமாக அமல்படுத்துவோம் என்று கூறுவது சரியல்ல என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai