சுடச்சுட

  

  கரும்பு கொள்முதல் விலை:டன்னுக்கு ரூ. 2,500-ஆக நிர்ணயம்

  By பெங்களூரு,  |   Published on : 11th November 2013 06:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடகத்தில் கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ. 2,500-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ. 3,500-ஆக நிர்ணயிக்க வலியுறுத்தி, கர்நாடக மாநிலம், பிஜாப்பூர், பாகல்கோட்டை, பெல்காம், மண்டியா ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

  இந்த நிலையில், கரும்புக்கான கொள்முதல் விலையை நிர்ணயம் செய்வது குறித்து பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை மாநில அமைச்சர்கள் மகாதேவ பிரசாத், கிருஷ்ண பைரேகெüடா, எஸ்.ஆர்.பாட்டீல், பிரகாஷ் ஹுக்கேரி ஆகியோருடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.

  இதைத் தொடர்ந்து, பெங்களூரு விகாஸ் செüதாவில் நடைபெற்ற கரும்பு கொள்முதல் நிர்ணய வாரியக் கூட்டத்தில், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் குருபூர் சாந்தகுமார், கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர் புட்டனையா, சர்க்கரை ஆலைப் பிரதிநிதிகள் ஆகியோருடன் மாநில அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

  விலை நிர்ணயம்:கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் மகாதேவ பிரசாத் கூறியது:

  விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு, கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ. 2,500-ஆக நிர்ணயித்துள்ளோம் என்றார் அவர்.

  அமைச்சர் பிரகாஷ் ஹுக்கேரி கூறியது:

  விவசாயிகளிடமிருந்து டன் கரும்பு ரூ. 2,400-க்கு சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்யும். மேலும், அரசு சார்பில் விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ. 100 தரப்படும். இதற்காக ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

  போராட்டம் தொடரும்: விவசாயிகள் சங்கத் தலைவர் குருபூர் சாந்தகுமார் கூறியது:

  கரும்பின் பிழிவுதிறன் அடிப்படையில் கொள்முதல் விலை நிர்ணயிக்குமாறும், கரும்பு உற்பத்திச் செலவு 25 சதம் கூடியுள்ளதால், டன் கரும்புக்கு கொள்முதல் விலையாக ரூ. 3,500 வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.

  ஆனால், எங்களது கோரிக்கையை அரசு கண்டு கொள்ளவில்லை. இதனால், அரசின் இந்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை.

  எனவே, வருகிற 15-ஆம் தேதி விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai