சுடச்சுட

  

  சொகுசுப் பேருந்துகளில் தீ விபத்து ஏற்படுவது ஏன்?

  By பெங்களூரு  |   Published on : 11th November 2013 06:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சொகுசுப் பேருந்துகளில் பயணிகள் கொண்டு செல்லும் சரக்குகளால்தான் பெரும்பாலும் தீ விபத்துகள் நிகழ்வதாக, தென்மாநில லாரி ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராமசந்திரன் தெரிவித்தார்.

  பெங்களூருவில் இருந்து ஹைதராபாத் சென்ற தனியார் சொகுசுப் பேருந்து மெஹ்பூப்நகர் அருகே அண்மையில் தீ விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

  இந்த நிலையில், பெங்களூரு, ஷிமோகா ஆகிய நகரங்களில் அரசுக்குச் சொந்தமான சொகுசுப் பேருந்திலும் அண்மையில் தீ விபத்துகள்  நிகழ்ந்தன.

  இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதற்கான காரணம் குறித்து ராமசந்திரன் கூறியது:

  பேருந்துகள் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், அரசு மற்றும் தனியார் சொகுசுப் பேருந்துகளில் சரக்குகள் ஏற்றப்படுகின்றன. தனியார் பேருந்துகளில் அளவுக்கு அதிகமாக சரக்குகள் ஏற்றுப்படுகிறது.

  இது மோட்டார் வாகனங்கள் சட்டம், போக்குவரத்துக் காவல் சட்டங்களின்படி தவறாகும். பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் சரக்குகள் ஏற்றுவதால் மத்திய, மாநில அரசுகளுக்கு வணிக வரி, சேவை, கலால் வரி ஆகியவை இழப்பு ஏற்படுகின்றன.

  மேலும், அந்தப் பேருந்தில் பயணிகள் கொண்டு செல்லும் சரக்கு பைகளில் என்ன வைக்கப்பட்டுள்ளன என்பது யாருக்கும் தெரியாது. பல நேரங்களில் வெடி மருந்து, கடத்தல் பொருள்கள் சரக்குகளாக கொண்டு செல்லப்படுகின்றன. இது மிகவும் ஆபத்தானது.

  எனவே, அரசு மற்றும் தனியார் சொகுசுப் பேருந்துகளில் சரக்குகளை ஏற்றிச் செல்ல தடை விதிக்க வேண்டும். மேலும், பயணிகள் கொண்டு செல்லும் பொருள்களை நவீன சோதனைகருவி மூலம் சோதித்து அனுமதிக்க வேண்டும். அப்போதுதான், பேருந்துகளில் தீ விபத்துகளைத் தடுக்கலாம் என்றார் அவர்.

  இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியது:

  அரசு மற்றும் தனியார் சொகுசுப் பேருந்துகளில் சரக்குகள் ஏற்றப்படுவது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

  பயணிகள் பேருந்துகளில் சரக்குகளை கொண்டு செல்வது சட்டப்படி குற்றமாகும்.

  எனவே, பயணிகள் பேருந்துகளில் சரக்குகள் கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்து  சோதனை நடத்தப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai