சுடச்சுட

  

  போலி குடும்ப அட்டைகள் கண்டறியும் பணி தொடக்கம்

  By பெங்களூரு  |   Published on : 11th November 2013 06:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடகத்தில் போலி குடும்ப அட்டைகளைக் கண்டறியும் பணிகள்   தொடங்கியுள்ளன.

  இதுகுறித்து பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஆணையர் ஹர்ஷ்குப்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  மாநிலத்தில் ஏராளமான போலி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இதைத் தொடர்ந்து, போலி குடும்ப அட்டைகளைக் கண்டறியும் பணியை பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியுள்ளோம்.

  தலா 21 ஆய்வாளர்கள் அடங்கிய 2 குழுக்கள் அமைக்கப்பட்டு இந்தச் சோதனை நடத்தப்படுகிறது. இந்தக் குழுவினர் நியாய விலை அங்காடிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டு குடும்ப அட்டைதாரர் பட்டியலையும், குடும்ப அட்டைகளையும் ஒப்பிட்டு சோதனை செய்வர்.

  நியாய விலை அங்காடிகள் தவிர வீடுகளுக்கும் சென்று குடும்ப அட்டைகளை இந்தக் குழுவினர் சோதனை செய்வர். போலி குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் நியாய விலை அங்காடிகள், நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

  மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் நியாய விலை அங்காடிகள் உள்ளன. நியாய விலை அங்காடிகளில் சராசரியாக தலா 600 குடும்ப அட்டைகள் உள்ளன. 30 மாவட்டங்களிலும் சோதனை முடுக்கிவிடப்படும்.

  போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு, அவைகள் ரத்து செய்யப்படும். இதேபோல, போலி குடும்ப அட்டை கொடுக்கக் காரணமாக இருந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சாமராஜ்பேட்டையில் உள்ள நியாய விலை அங்காடியில் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தப்பட்டது. இதில் 205 அட்டைகளில் 64 அட்டைதாரர்களின் முகவரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 31 அட்டைதாரர்கள் முகவரியை மாற்றியுள்ளனர். சோதனையில் முறைகேடு கண்டறியப்பட்டதால், நியாய விலை அங்காடியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

  மேலும், இதற்கு காரணமான ஆய்வாளரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளோம். இந்த சோதனை மாநிலம் முழுவதும் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai