சுடச்சுட

    

    "பாலியல் குற்றங்களைக் குறைக்க சமூக ஒழுக்கத்தை கட்டமைக்க வேண்டும்'

    By பெங்களூரு,  |   Published on : 12th November 2013 06:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாலியல் குற்றங்களைக் குறைக்க சமூக ஒழுக்கத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று, சமூக ஆய்வாளரும்,  மென்பொருள் பயிற்சியாளருமான ஜீலானிகான் தெரிவித்தார்.

    திருக்குர்ஆன் வாசகர் வட்டத்தின் சார்பில், பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை பாலியல் குற்றங்களும், தீர்வுகளும் என்ற தலைப்பிலான கருத்தரங்கைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:

    கள்ளக் காதல், சீர்குலையும் குடும்ப உறவுகள், தொடரும் பாலியல் பலாத்காரங்கள், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுக்காப்பின்மை, மதிப்பிழக்கும் பெற்றோர்கள், பெருகும் முதியோர் இல்லங்கள், தந்தைகளற்ற குழந்தைகள் போன்ற சமூக அவலங்கள் அண்மைக் காலமாகப் பெருகி வருகின்றன. இது மனித வாழ்க்கைக்கு பெரும் சவாலாக மாறி வருகிறது. அதிலும் குறிப்பாகப் பெண்கள் மீது தினமும் நிகழ்த்தப்படும் பாலியல் பலாத்காரங்கள், வன் முறைகள் வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது. குடும்பங்கள் சீரான முறையில் அமைவது, நல்ல சமூகத்திற்கு வழி வகுக்கும்.

    நல்ல சமூகத்தைப் படைப்பதற்கு சமூகக் கட்டுப்பாடுகள் மிகவும் அவசியம். பெண்கள் மீதானப் பாலியல் பலாத்காரங்களைக் குறைக்க ஆண், பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு அவசியம். ஆபாசமானத் திரைப் படங்கள், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பாலியல் ஒழுக்கம் மிகவும் அவசியம். ஆண்களுக்கும், பெண்களுக்கும் கட்டாயக் கல்வி கொடுக்க வேண்டும்.  தனி நபர் ஒழுக்கத்தைப் பேணுவது அவசியம். இதற்கு சமூக ஒழுக்கத்தைக் கட்டமைக்க வேண்டியது அவசியம். பெண்களுக்கு கல்வி, சொத்து, மறுமணம் போன்ற உரிமைகளை அளிக்க வேண்டும்.

    ஆண்களும், பெண்களும் அரசு வகுத்துள்ள வயதில் திருமணம் செய்வது பாலியல் குற்றங்களைக் குறைக்கும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையை வழங்க கடுமையானச் சட்டங்கள் தேவைப்படுகிறது.

    பெண்களை மதிக்கும் பாங்கை ஆண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்புக்கு பெண்களைக் கண்ணியமாக நடத்துவது அவசியம் என்றார் அவர்.

    நிகழ்ச்சியில் அமைப்பாளர் காசிம், சமூகச் சிந்தனையாளர் இஸ்மாயில் உமரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai