சுடச்சுட

  

  நரேந்திர மோடியின் பேச்சைக் கேட்டு கர்நாடக மக்கள் மயங்கிவிடக் கூடாது என்று, கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.

  இதுகுறித்து பெங்களூருவில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

  பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, பெங்களூருவில் நவ.17-ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டம் மற்றும் பேரணியில் பங்கேற்கவிருக்கிறார். நாடெங்கும் நடக்கும் பொதுக் கூட்டங்களில் நரேந்திர மோடி பல்வேறு கட்டுக் கதைகளைக் கூறி வருகிறார். அதேபோல, பெங்களூரு பொதுக் கூட்டத்திலும் பல இட்டுக் கட்டிய கதைகளை மோடி கூறலாம்.

  மோடியின் கட்டுக் கதைகளைக் கேட்டு கர்நாடக மக்கள் மயங்கிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறேன். ராஜ்குமார், கெம்பேகெüடா, கிருஷ்ணதேவராயா மற்றும் நவீன கிருஷ்ணதேவராயா கதைகளையும்கூட அவர் கூறலாம். மக்களைத் திசை திருப்பும் வேலையில் மோடி ஈடுபட்டு வருகிறார்.

  ராமருக்கு கோயில் கட்டுவதாக மக்களிடம் பணம் மற்றும் செங்கல்களைச் சேகரித்த பாஜகவினர், மோடியை முன்னிலைப்படுத்திக் கொண்டு சர்தார் வல்லபாய் படேல் சிலையை அமைக்க இரும்புக் கம்பிகளை சேகரிக்கும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

  கடந்த 12 ஆண்டுகளில் படேலை நினைத்துப் பார்க்காத மோடி, திடீரென அவருக்கு சிலை வைக்கப் பண வசூலில் ஈடுபட்டு வருகிறார்.

  காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகள், நாட்டு மக்களை திசை திருப்பும் வேலையைச் செய்து வருகின்றன. மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு இரு கட்சிகளும் ஆக்கப் பூர்வமான செயல்களில் ஈடுபடவில்லை.

  திருமண நிதி உதவித் திட்டத்தை அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்களுக்கும் விரிவு படுத்துவதாக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.

  எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தலில் கர்நாடகத்தில் 28 தொகுதிகளிலும் மஜத தனித்துப் போட்டியிடும். காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் மக்கள் விரோதப்போக்கு மற்றும் தோல்விகள் குறித்து மக்களிடம் விளக்கிக் கூறி பிரசாரம் செய்வோம் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai