போலி மருந்துகள் விற்றால் கடும் நடவடிக்கை
By பெங்களூரு, | Published on : 16th November 2013 05:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கர்நாடகத்தில் போலி மருந்துகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் யூ.டி. காதர் எச்சரித்தார்.
பெங்களூரு விகாஸ் செüதாவில் கர்நாடக மாநில மருந்து ஒழுங்குமுறை துறை சார்பில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற மருந்து ஆய்வாளர்களுக்கான பயிலரங்கைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:
ஆரோக்கியமான சமுதாயத்தைப் படைப்பதில் மருந்து ஆய்வாளர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அரசின் திட்டங்களை திறம்பட செயல்படுத்த அதிகாரிகள் ஆர்வம் காட்ட வேண்டும்.
உடல் நலனை பாதுகாப்பதற்காக மக்களுக்கு அளிக்கப்படும் மருந்துகள் தரமானதாக இருக்க வேண்டும். மருந்துகளால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படக் கூடாது.
சந்தையில் போலி மருந்துகள் விற்கப்படுகிறதா என்பதை மருந்து ஆய்வாளர்கள் கண்டறிய வேண்டும்.
ஒரு நோயைக் குணமாக்கும் மருந்து, வேறொரு நோயை தோற்றுவிக்கக் கூடாது. போலி மருந்துகள், போதை மயக்கத்தை தூண்டும் மருந்துகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள், அங்காடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அந்த மருந்தகத்தின் உரிமமும் ரத்து செய்யப்படும்.
போலி மருந்துகள் குறித்து பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் கர்நாடக அரசின் தலைமை வழக்குரைஞர் ரவிவர்மகுமார், மருந்து ஒழுங்குமுறை துறை அதிகாரி அமலுசாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.