சுடச்சுட

  

    கர்நாடக மாநிலம், தடதியில் புதிய துறைமுகம் அமைக்கத்  திட்டமிட்டுள்ளதாக மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

  பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்ற 15-ஆவது கடல்சார் மாநிலங்கள் வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:

  இந்திய துறைமுகங்களின் செயல்திறன் மேம்பாட்டுக்காகவும், அவற்றின் செயல்பாடுகளை நவீனப்படுத்தவும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் செயல்திறன் ஆண்டொன்றுக்கு 1,300 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது.

  2020-க்குள் இதை 3,200 மெட்ரிக் டன்னாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.

  மேற்கு வங்கத்தின் சாகர் தீவு, ஆந்திர மாநிலத்தின் துகராஜ்பாட்டினம் ஆகியவற்றில் இரு  புதிய துறைமுகங்களைத் தொடங்க பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல, கர்நாடகத்தில் தடதி, கேரளத்தில் அழிக்கல்லில் புதிய துறைமுகங்கள் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை பெறப்பட்டுள்ளன.

  இந்திய துறைமுகப் பிரிவு வளர்ச்சியில் கடல்சார் மாநிலங்கள் மற்றும் பெரியவை அல்லாத துறைமுகங்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

   மீன்பிடிக் கலங்களுக்கானப் பதிவு, ஆய்வு, சான்றளித்தல் ஆகியவை குறித்து மாநில அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

  எண்ணெய்க் கசிவை எதிர்கொண்டு சமாளிக்கவும், கேப்பிடல் டிரெட்ஜிங் செயல் திட்டங்களுக்கு உரிய நிதியுதவி அளிக்கவும், மாநில கடல்சார் வாரியங்களுக்கும், மாநில அரசுகளுக்கும் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

  எண்ணெய்க்கான மேல் வரி வசூலித்தல் முறையை சீராக்குவதற்கான வழிகாட்டும் விதிமுறைகளை மத்திய கப்பல் அமைச்சகம் விரைவில் வெளியிடும். இதன்மூலம், துறைமுகங்களின்  மாசுக்களை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும் என்றார் அவர்.

  விழாவில் துறைமுகத் தலைவர்கள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai