சுடச்சுட

    

    அரசியல்வாதிகள் மீதான விமர்சனம்: சி.என்.ஆர்.ராவ் விளக்கம்

    By பெங்களூரு,  |   Published on : 19th November 2013 05:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசியல்வாதிகளை முட்டாள்கள் என்று விமர்சித்தது குறித்து பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுத் தலைவரும், விஞ்ஞானியுமான சி.என்.ஆர்.ராவ் விளக்கம் அளித்தார்.

    பாரத ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சி.என்.ஆர்.ராவ், தன்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம் அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் போதிய நிதி ஒதுக்காத அரசியல்வாதிகள் முட்டாள்கள் எனத் தெரிவித்திருந்தார்.

    அவரது கருத்து பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது. இந்த நிலையில், பெங்களூருவில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் சி.என்.ஆர்.ராவ் கூறியது:

    நமது நாட்டில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கான முதலீடு, அதற்கான நிதியுதவி ஆகியவை மிகவும் குறைவாக இருப்பது முட்டாள்தனமானது என்றுதான் நான் கூறினேன்.

    இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் கோபத்தில் பேசவில்லை. அறிவியல் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை துரதிருஷ்டவசமாக அவர்கள் (அரசியல்வாதிகள்) புரிந்து கொள்வதில்லை என்றுதான் நான் கூறியிருந்தேன்.

    அறிவியலுக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவம், அறிவியல் ஆராய்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்கீடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர்கள் (அரசியல்வாதிகள்) புரிந்து கொண்டால் இந்தியா ஒளிரும்.

    அறிவியல் ஆராய்ச்சிகளுக்குத் தேவையான நிதி ஆதாரம் குறித்து அவர்கள் (அரசியல்வாதிகள்) தெரிந்திருக்க வேண்டும். ஆனால், அதுகுறித்த புரிதல் அவர்களுக்கு இல்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தவே, முட்டாள்தனமான சூழ்நிலை என்று கூறினேன்.

    நான் யாரையும் முட்டாள் என்று குறிப்பிடவில்லை. இனிமேல் அந்தச் சொல்லை நான் பயன்படுத்தமாட்டேன்.

    அறிவியல் வளர்ச்சிக்கு அதிகமான உதவியை அரசிடம் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

    அரசியல்வாதிகள் மட்டுமே காரணமல்ல

    இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக (இஸ்ரோ) முன்னாள் தலைவர் ஜி.மாதவன் நாயர் கூறியது:

    அறிவியல் ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதி மிகவும் குறைவானது. ஆனால், அதற்கு அரசையும், அரசியல்வாதிகளையும் மட்டுமே குற்றம்சாட்ட முடியாது. அறிவியல் ஆராய்ச்சிக் கூடம் அல்லது விஞ்ஞானியிடம் சென்றடையும் நிதி குறைவாக இருக்கலாம். இதற்கு அரசியல்வாதிகள் அல்லது அரசு மட்டுமே காரணமல்ல. அறிவியல் வளர்ச்சிக்கு அரசு தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகிறது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai