Enable Javscript for better performance
தற்கால அறிவியல் ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்துவது அவசியம்- Dinamani

சுடச்சுட

    

    தற்கால அறிவியல் ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்துவது அவசியம்

    By பெங்களூரு  |   Published on : 19th November 2013 05:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தற்கால அறிவியல் ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் கவனம் செலுத்துவது அவசியம் என்று, பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுத் தலைவரும், விஞ்ஞானியுமான

    சி.என்.ஆர்.ராவ் தெரிவித்தார்.

    பெங்களூருவில் ஜவகர்லால் நேரு அதிநவீன அறிவியல் ஆராய்ச்சி மையம் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற "அறிவியலைக் கொண்டாடுவோம்' என்ற கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது:

    தற்கால அறிவியல் ஆராய்ச்சிகளை ஆராய்ந்தால், இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சிப் பணிகள் 1950 ஆண்டுகளில் இருந்ததைப் போல அமைந்துள்ளன. நேற்றைய, இன்றைய அறிவியல் ஒரே மாதிரி இருக்க முடியாது. தற்கால அறிவியலுக்குத் தேவையான அறிவியல் ஆராய்ச்சிகளில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட வேண்டும்.

    இந்தியாவுக்கான காலம் நெருங்கி வருகிறது. இன்னும் நேரம் இருப்பதாகக் காத்திருக்க முடியாது. 140 நாடுகளில் புதுமை படைப்பதில் இந்தியா 66-ஆவது இடத்தில் உள்ளது. உலக அளவில் நடைபெறும் அறிவியல் மாநாடுகளில் ஒரு சத ஆராய்ச்சிக் கட்டுரைகளை மட்டுமே இந்தியர்கள் தாக்கல் செய்கிறோம்.

    மொத்த ஆராய்ச்சிக் கட்டுரைகளில் அமெரிக்கா 10 சதமும், சீனா 5 சதமும் பங்களிக்கின்றன. அறிவியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இந்தியாவுக்கு வெறும் 20 ஆண்டுகள் மட்டுமே உள்ளன. அதற்குள் அறிவியலில் இந்தியா சாதித்துவிட வேண்டும்.

    அறிவியலுக்கு விடுமுறை நாள்கள் கிடையாது. தினமும் அறிவியல் ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் இருக்க வேண்டும். குறிப்பாக, எரிசக்தி மற்றும் தண்ணீர் தொடர்பான ஆராய்ச்சிகள் அதிகரிக்க வேண்டும்.

    அறிவியலில் சிறந்து விளங்கும் இந்தியாவில் இனிமேல் நீரால் உருவாகும் நோய்கள் பரவக் கூடாது. அதற்கானக் கண்டுபிடிப்புகளில் நமது விஞ்ஞானிகள் ஈடுபட வேண்டும். அறிவியலை வெளிப்படையாக விமர்சிக்கலாம், கேள்விக்கு உள்படுத்தலாம்.

    அது யாரையும் காயப்படுத்துவதாக இருக்கக் கூடாது.

    இந்தியர்கள் தன்னலமற்றவர்களாக இருக்க வேண்டும். இந்தியாவில் அறிவியலுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது என்றார் அவர்.

    முன்னதாக பாரத ரத்னா விருதுக்கு சி.என்.ஆர்.ராவ் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், சி.என்.ஆர்.ராவுக்கும், அவரது மனைவி இந்துமதிக்கும் விஞ்ஞானி ரோத்தம் மாலை அணிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai