சுடச்சுட

  

  கர்நாடகத்தில் புதிய மதுக் கடைகளைத் திறக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்று, அந்த மாநில கலால் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.

  இதுகுறித்து பெங்களூருவில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் பரவலாக மதுக் கடைகளுக்கானத் தேவை அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் 176 வட்டங்கள் உள்ளன. வட்டத்திற்கு 3 மதுக் கடைகளைத் திறப்பதற்கான தேவை இருக்கிறது.

  ஆனாலும், புதிய மதுக் கடைகளைத் திறக்கும் திட்டம் அரசிடம் இல்லை. எம்.எஸ்.ஐ.எல்.நிறுவனத்தின் மூலம் 400 சில்லறை மதுக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனத்தின் மூலம், ஏற்கெனவே திட்டமிட்டப்படி 100 கடைகள் திறக்கப்படும்.

  போதுமான மதுக் கடைகள் இல்லாததால், சட்ட விரோதமாக மது விற்கும் நிலை உள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுகிறது. இதைத் தடுத்து நிறுத்துவோம்.

  பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு வருவதால், புதிய மதுக் கடைகள் திறக்க முடிவதில்லை. எனினும், இதுகுறித்து ஆராய பெங்களூருவில் விரைவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும்.

  கர்நாடகத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவது 95 சதம் தடுக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தில் ஈடுபடுவோருக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை சமூக நலத் துறை மூலம் செயல்படுத்தியுள்ளோம். இதுவரை 2 ஆயிரம் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளோம்.

  நிகழாண்டில், கலால் துறைக்கு ரூ. 12,600 கோடி வரி வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். கடந்த 6 மாதக் காலத்தில் ரூ. 6 ஆயிரம் கோடி வரி வசூலித்துள்ளோம். கடந்த ஆண்டு வரி இலக்கு

  ரூ. 11,400 கோடியாக இருந்தது.

  மலிவு விலை மதுபானங்களை அறிமுகம் செய்யும் திட்டம் அரசிடம் இல்லை. கலால் துறையில் 2,200 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் 1,700 இடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் இரண்டு ஆண்டுகளில் நிரப்பப்படும். எனினும், உடனடியாக 500 பணியிடங்கள் நிரப்பப்படும்.

  மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விலையை 10 சதம் அதிகரிக்க மதுபான உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai