ஊழல் அரசியல்வாதிகளை சுட்டுக் கொல்ல வேண்டும்
By பெங்களூரு, | Published on : 24th November 2013 05:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஊழல் புரியும் அரசியல்வாதிகள், அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று, கர்நாடக முன்னாள் டிஜிபி சங்கர் பிதரி தெரிவித்தார்.
பெங்களூருவில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
நாட்டில் நீதி, நியாயத்தை நிலைநாட்டுவதில் சரியான நடைமுறை நம்மிடம் காணப்படவில்லை. இதனால், ஊழல் மலிந்து நாடே சீரழிந்து வருகிறது. இதைத் தடுக்க ஊழல் புரியும் அரசியல்வாதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளை பொதுமக்கள் முன் நிறுத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும். அப்போதுதான் நீதி, நியாயத்தை நிலைநாட்ட முடியும்.
ரூ. 50 லஞ்சம் வாங்கும் காவலருக்கும், கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெறும் அரசியல்வாதிக்கும், அதிகாரிக்கும் ஒரே தண்டனை என்றால், அதை எப்படி ஏற்க முடியும். ஊழல் செய்வோருக்கு மரண தண்டனைத்தான் தீர்வாக அமையும்.
நீதித் துறை மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்பட வேண்டுமென்றால், தவறு செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றார் சங்கர் பிதரி.
சங்கர் பிதரியை கைது செய்ய வேண்டும்: இதுதொடர்பாக கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் குமாரசாமி கூறியது:
சங்கர் பிதரி கடினமான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளது சரியல்ல. இதற்காகவே அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இல்லையென்றால், பிதரிக்கு பாதுகாப்பு கொடுங்கள். ஊழல் அதிகாரி என்று அவரை யாராவது குறிவைக்கப் போகிறார்கள் என்றார் அவர்.