Enable Javscript for better performance
பேரவைக் கூட்டத்தில் விவசாயிகள் பிரச்னையை எழுப்புவேன்- Dinamani

சுடச்சுட

    

    பேரவைக் கூட்டத்தில் விவசாயிகள் பிரச்னையை எழுப்புவேன்

    By பெங்களூரு  |   Published on : 24th November 2013 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடக சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத் தொடரில் விவசாயிகள் பிரச்னையை எழுப்புவேன் என்று, எதிர்க்கட்சித் தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.

    இதுகுறித்து பெங்களூருவில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்து ஆறு  மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. இந்த நிலையில், பெல்காமில் வருகிற 25-ஆம் தேதி சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குகிறது.

    இந்தக் கூட்டத்தில் கடந்த 6 மாதக் காலத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசின் பொறுப்பற்ற நிர்வாகத்தை சுட்டிக் காட்டுவேன். விவசாயிகள் இன்னலில் தவித்தாலும், வேளாண் விளை பொருள் விலை நிர்ணய ஆணையத்தை அமைக்காமல் மாநில அரசு மெத்தனமாக  செயல்படுகிறது.

    நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்தவில்லை. இந்த பிரச்னைகள் குறித்து கூட்டத் தொடரில் பேசுவேன். முஸ்லிம் பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம், பிற்படுத்தப்பட்ட மாணவர் சுற்றுலாத் திட்டத்தில் குளறுபடிகள் தவிர, வேறு சில பிரச்னைகளையும் சட்டப்பேரவையில் கிளப்புவேன்.

    பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் நடத்துவோம். எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவி கொடுக்காவிட்டால், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்தவிட மாட்டோம்.

    காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. இதுபோன்ற மக்கள் பிரச்னைகளை விவாதிக்க 100 நாள்கள் கூட்டத் தொடர் போதுமானதல்ல.

    கரும்புக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயித்ததில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது. கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை மாநில அரசு கண்டு கொள்ளவில்லை. விலை நிர்ணய ஆணையம் அமைப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும், அது எப்போது அமைக்கப்படும் என்ற கேள்விக்கு விடையில்லை.

    வெள்ளம் மற்றும் வறட்சியால் ஏற்பட்ட பயிர் இழப்பு குறித்து தகவல் கேட்டால்,  அதிகாரிகள் தர மறுக்கிறார்கள். மாநில அரசின் நிர்வாக சீர்கேடுகள் குறித்து ஆளுநர் பரத்வாஜ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    எனவே, காங்கிரஸ் அரசின் தோல்விகளை சட்டப்பேரவைக் கூட்டத்தில் முன்வைப்பேன் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai