Enable Javscript for better performance
பேரவையில் வட கர்நாடக மக்களின் பிரச்னைகளை விவாதிக்க முக்கியத்துவம்- Dinamani

சுடச்சுட

    

    பேரவையில் வட கர்நாடக மக்களின் பிரச்னைகளை விவாதிக்க முக்கியத்துவம்

    By பெங்களூரு  |   Published on : 24th November 2013 05:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடக மாநிலம், பெல்காமில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத் தொடரில் வட கர்நாடக மக்களின் பிரச்னைகளை விவாதிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று, அந்த மாநில சட்ட மேலவைத் தலைவர் டி.எச்.சங்கரமூர்த்தி தெரிவித்தார்.

    இதுகுறித்து பெங்களூருவில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    பெல்காமில் வருகிற 25-ஆம் தேதி தொடங்கி 10 நாள்களுக்கு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத் தொடரில், வட கர்நாடக மக்களின் பிரச்னைகளை விவாதிக்க முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது பெல்காமில் நடைபெறும் 4-ஆவது கூட்டத் தொடராகும். இந்தக் கூட்டத் தொடரில் கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானம், பூஜ்யநேரம் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் இடம் பெறும்.

    வேளாண் விளை பொருள் சந்தைப்படுத்தல் விவகாரங்கள் திருத்த சட்ட மசோதா, கர்நாடக பஞ்சாயத்துராஜ் திருத்த சட்ட மசோதா உள்ளிட்ட 15 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகிறது.

    சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது, வன்முறையை ஏவ சிலர் முயற்சித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, பாதுகாப்பை பலப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். குறிப்பாக சுவர்ண விதான செüதா கட்டடத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி டிஜிபியை கேட்டுக் கொண்டுள்ளேன்.

    பாஜகவில் இருந்து எம்.எல்.சி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர், கட்சி விரோத செயல்களில் ஈடுபடுவதாக அவர்களை பதவிநீக்கம் செய்யக் கோரி, பாரதி ஷெட்டி, பி.ஜே.புட்டசாமி, எம்.டி.லட்சுமிநாராயணா, மோகன்லிம் பேகாயி, சிவராஜ் சஜ்ஜன், மும்தாஸ் அலிகான் ஆகியோர் மீது அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.சி.க்கள் மதுசூதன்,  அஸ்வத்நாராயணா ஆகியோர் புகார் அளித்திருந்தனர்.

    இவர்களில் மோகன்லிம் பேகாயி, சிவராஜ் சஜ்ஜன், மும்தாஸ் அலிகான் ஆகியோர் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். மீதமுள்ளோரிடம் விளக்கம் பெறப்பட்டு, அது பாஜகவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் பதில் கிடைத்ததும் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai