சுடச்சுட

  

  ஐ.நா.வில் தமிழீழக் கொடி பறக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

  பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை பொங்கு தமிழ் இயக்கத்தின் சார்பில், பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் நடந்த இனமான தமிழர் நினைவேந்தல் நிகழ்வை தொடக்கிவைத்து அவர் பேசியது:

  பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது. பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகத்தில் வாழும் தமிழ் மக்கள், காவிரி உள்ளிட்ட கர்நாடக பிரச்னைகளில் கன்னட மக்கள் மற்றும் அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளனர். கர்நாடகத்தில் வாழும் தமிழ் மக்கள் கன்னட மக்களுக்கும், அந்த மாநில அரசுக்கும் இணக்கமாக வாழ வேண்டும்.

  இந்தியாவின் பிரதமராக இருந்தவர்களில் இந்திரா காந்தியை தவிர ராஜீவ் காந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட யாரும் ஈழத் தமிழர் பிரச்னையை சரியாகக் கையாளவில்லை. இலங்கையில் நடந்த இனப் படுகொலையை  அரங்கேற்றியது இந்தியாதான்.

  காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்துவதற்கு இந்தியாதான் பின்புலமாக இருந்தது. காமன்வெல்த் மாநாடு மூலம் இனப் படுகொலையில் இருந்து தப்பிக்க ராஜபட்சவும், இந்தியாவும் திட்டமிட்டுள்ளன.

  ஒவ்வொரு ஆண்டும் பொது வாக்கெடுப்பு மூலம் புதிய நாடுகள் மலர்ந்து வருகின்றன. அதுபோல, தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழீழ மக்களுக்கான அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தீர்வாக இது அமையும்.

  அரசியலில் பெரிய பதவிகளை நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால், சுதந்திரத் தமிழீழம் அமைந்ததும், ஐ.நா.வில் நான் பேச வேண்டும் என்று, பிரபாகரனிடம் தெரிவித்திருந்தேன். ஐ.நா. கட்டடத்தில் தமிழீழ அரசின் கொடி பறக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இதைச் சாதிக்க உலகத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்றார் வைகோ.

  நிகழ்ச்சியில் பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் கோ.தாமோதரன், மாமன்ற உறுப்பினர் தன்ராஜ், பேராசிரியர் ராமமூர்த்தி, நளினி கணேசன், சசிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai