சுடச்சுட

    

    மாநில அரசுகளின் அலட்சியத்தால் நாட்டின் கல்வித் தரம் வீழ்ச்சி

    By பெங்களூரு,  |   Published on : 26th November 2013 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "மாநில அரசுகளின் அலட்சியத்தால் நாட்டின் கல்வித் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது' என்று மத்திய மனித வளத் துறை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்தார்.

    பெங்களூருவில் திங்கள்கிழமை தேசிய உயர் கல்வி இயக்கம், அகில இந்திய உயர் கல்வித் துறை அமைச்சர்கள் மாநாட்டை தொடக்கிவைத்து அவர் பேசியது:

    மாநில அரசுகளின் அலட்சியப் போக்கால் நமது நாட்டின் கல்வித் தரம் வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளது. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் ஏராளமான பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்தப் பல்கலைக்கழகங்கள் கல்வியின் தரத்தைப் பராமரிப்பதைக் காட்டிலும், மானியம் கேட்பது, மானியத்தை விநியோகிப்பது, நிர்வாகம், தேர்வு நடத்துவது, தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.

    இதனால், நாட்டின் உயர் கல்வியின் தரம் பாராட்டும்படி இல்லை. சில மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தொலைநோக்கு சிந்தனை இல்லாததால் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த இயலவில்லை. மத்திய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிட்டால், மாநில பல்கலைக்கழகங்களின் கல்வித் திறன், கற்பிக்கும் திறன் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது.

    எனவே, உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், பாடத் திட்டங்களை திருத்தியமைத்து, ஆராய்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக தேசிய உயர் கல்வி இயக்கம் (ஆர்.யூ.எஸ்.ஏ.) தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அரசு, தனியார் பல்கலைக்கழகங்களின் கல்வித் தரம் மேம்படுத்தப்படும்.

    இந்தத் திட்டத்துக்காக 12, 13-ஆம் ஐந்தாண்டு திட்டங்களில் ரூ.ஒரு லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் நாட்டின் 306 பல்கலைக்கழகங்கள், 8500 கல்லூரிகள் பயனடையவிருக்கின்றன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் 65:35 என்ற விகிதத்தில் நிதி வழங்கும். எனவே, இந்தத் திட்டத்தை மாநில அரசுகள் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

    விழாவில், கர்நாடக உயர் கல்வித் துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai