சுடச்சுட

    

    பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு வருகிற டிசம்பர் 5-ஆம் தேதி நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று, மேயர் சத்தியநாராயணா தெரிவித்தார்.

    பெங்களூரு மாநகராட்சியில் கட்டுமானம், மின்சாரப் பணிகளைச் செய்து வரும் சுமார் 2,500 ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த 15 மாதங்களாக பணம் வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதைக் கண்டித்து, பெங்களூரு மாநகராட்சி வளாகத்தில் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே. சீனிவாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை தர்னா நடைபெற்றது.

    இதையடுத்து, அவர்களைச் சமாதானம் செய்த பிறகு, செய்தியாளர்களிடம் மேயர் சத்தியநாராயணா பேசியது:

    ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க வேண்டியது மாநகராட்சியின் கடமை. ஆனால், பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க முடியாமல் உள்ளது. முதலில் பணி முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து, கடந்த அக்டோபர் மாதம் வரையிலான நிலுவைத் தொகையை வருகிற டிசம்பர் 5-ஆம் தேதியன்று வழங்கப்படும்.

    கடந்த அக்டோபர் மாதத்திற்கு பிறகு உள்ள நிலுவைத் தொகை படிப்படியாக வழங்கப்படும். கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாநகராட்சி ஒப்பந்ததாரர் கிரிஷின் குடும்பத்தினருக்கு மாநகராட்சி சார்பில் ரூ. 20 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். எனவே, ஒப்பந்ததாரர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai