கர்நாடகத்தில் வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக அரசுக்குத் தவறானத் தகவல் அளித்த அமைச்சர் கமருல் இஸ்லாம் பதவி விலக வேண்டும் என்று, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் வலியுறுத்தினார்.
கர்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கூட்டம் தொடங்கியதும் ஜெகதீஷ் ஷெட்டர் பேசியது:
வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கமருல் இஸ்லாம் அவைக்கு தவறானத் தகவல்களை அளித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்ட மேலவையில் உரிமை மீறல் குழு அறிக்கை அளித்துள்ளது. அதில் அமைச்சர் கமருல் இஸ்லாம் தவறானத் தகவல் அளித்து அவையை திசைத் திருப்பியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, கமருல் இஸ்லாம் தனது அமைச்சர் பதவியை உடனடியாக ராஜிநாமா செய்யவேண்டும் என்றார் அவர்.
அப்போது, குறுக்கிட்டப் பேசிய பேரவைத் தலைவர் காகோடு திம்மப்பா, வேளாண், தோட்டக்கலைத் துறை மானியக் கோரிக்கை மீது அந்தத் துறையின் அமைச்சர்கள் பதிலளிக்க இருப்பதால், அதன்பின்னர் இதுகுறித்து விவாதிக்க வாய்ப்புத் தருகிறேன் என்று கூறி, ஜெகதீஷ் ஷெட்டரை அமைதிப்படுத்தினார்.