பெங்களூருவில் இளம் பெண்ணை தனது கைப்பேசியில் ஆட்சேபகரமாகப் புகைப்படம் எடுத்த விவகாரம் தொடர்பாக கூடுதல் டிஜிபி ரவீந்திரநாத் மீது மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று, கர்நாடக உள் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார்.
கர்நாடக சட்ட மேலவையில் வியாழக்கிழமை விதி எண் 72-இன் கீழ் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர் எம்.சி.நானையா எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து அவர் பேசியது:
பெங்களூருவில் காபி கடையில் இளம் பெண்ணை தனது கைப்பேசியில் ஆட்சேபகரமாகப் புகைப்படம் எடுத்ததாக எழுந்த புகார் தொடர்பாக விளக்கம் கேட்டு கூடுதல் டிஜிபி ரவீந்திரநாத்துக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு அவர் அளிக்கும் பதிலின் அடிப்படையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை அரசு ற்கொள்ளும். ரவீந்திரநாத் விவகாரத்தில் விரும்பத்தகாத வகையில் நடந்து கொண்ட காவல் உதவி ஆய்வாளர் எம்.எஸ்.ரவி, காவலர் மஞ்சுநாத் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய கர்நாடக மாநில அதிரடிப் படை, ஐஆர்டியூ, சிறப்பு ஆர்பிஐ, ஆர்எஸ்ஐ படை வீரர்களுக்கு எதிராகவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
விசாரணையில்லாமல் ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழியில்லை. மேலும், பணியிடை நீக்கம் செய்திருந்தால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது. இந்த விவகாரத்தில் அரசின் செயல்பாட்டில் குறை இல்லை என்றார் அவர்.
முன்னதாக, இந்த விவகாரம் குறித்து நானையா பேசியது:
இந்த விவகாரத்தில் கூடுதல் டிஜிபி ரவீந்திரநாத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை அரசு எடுத்திருக்க வேண்டும். சட்ட விதிகளுக்கு எதிராக செயல்படும் இதுபோன்ற அதிகாரிகளுக்கு ஆதரவாக அரசு செயல்பட்டது சரியல்ல.
இந்த விவகாரத்தில் ரவீந்திரநாத் மீதான குற்றச்சாட்டை சிஐடி போலீஸார் விசாரணை மூலம் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து, ரவீந்திரநாத்தை பணியிடை நீக்கம் செய்திருக்க வேண்டும்.
இதுபோன்ற அதிகாரிகளை பணியில் வைத்திருப்பது வெட்கக் கேடானது. காவல் துறைக்கு இதுபோன்ற அதிகாரிகள் தேவையில்லை. எனவே, ரவீந்திரநாத் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.