பெங்களூரு குப்பை பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்துவது அவசியம் என்று, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான என்.எல்.நரேந்திரபாபு தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூருவில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மாநகராட்சி குப்பைகளைக் கொட்டுவதற்கு மண்டூர் கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், பெங்களூருவில் குப்பை பிரச்னை அதிகரித்துள்ளது.
வரும் நவம்பர் மாதத்திற்குள் குப்பை பிரச்னை தீர்க்கப்படும் என்று மண்டூர் மக்களிடம் அரசு உறுதி அளித்துள்ளது. ஆனாலும், அதுகுறித்து இன்னும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இதனிடையே, தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து வெளியேற்ற பொதுமக்கள் முன்வர வேண்டும். இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.