Enable Javscript for better performance
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை ஏப்.2-க்கு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை ஏப்.2-க்கு ஒத்திவைப்பு

    By  பெங்களூரு  |   Published on : 27th March 2014 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு சிறப்பு நீதிபதி ஒத்திவைத்தார்.
     வருமானத்திற்குப் பொருந்தாதவகையில் சொத்துகள் சேர்த்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான்மைக்கேல் குன்ஹா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
     இந்த வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நடந்து முடிந்துள்ள நிலையில், புதன்கிழமை சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் 4-ஆவது நாளாக தனது இறுதி வாதத்தை அரசு வழக்குரைஞர் பாவனிசிங் எடுத்து வைத்தார். அப்போது இந்த வழக்கில் சாட்சிகள் அளித்த சாட்சியங்களின் விவரங்களை எடுத்துரைத்தார்.
     1992-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 25-ஆம் தேதி முதல் 1993-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி வரை 24 மாதங்களுக்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா பெற்ற ரூ. 24 ஊதியத்தை கொடுத்ததாக, அரசு அதிகாரி எதேந்திரபாபு அளித்த சாட்சியத்தை அரசு வழக்குரைஞர் படித்துக் காண்பித்தார்.
     போயஸ்கார்டன் பங்களா ரூ. 7.25 கோடி மதிப்பிலும், சிறுதாவூர் பங்களா ரூ. 5.40 கோடி மதிப்பிலும், பையனூர் பங்களா ரூ. 1.25 கோடி மதிப்பிலும், ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் கட்டடம் ரூ. 3.50 கோடி மதிப்பிலும் கட்டடப் பணிகள் நடைபெற்றதை அவர் படித்துக் காட்டினார்.
     சூப்பர் டூப்பர், ஜெயா பப்ளிகேஷன், மார்பல் அண்ட் மார்பல், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனங்கள் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட காலக் கட்டங்களில் வருமான வரியைச் செலுத்தவில்லை என்று வணிக வரித் துறை அதிகாரிகள் கண்ணன், சுந்தரராஜ், சீனிவாசமூர்த்தி ஆகியோர் அளித்த சாட்சியங்களை நீதிபதியிடம் படித்துக் காட்டினார்.
     ஜெயலலிதா வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை செய்து கைப்பற்றிய 23 கிலோ எடையுள்ள தங்க, வைர நகைகளின் அன்றைய தின மதிப்பீடு ரூ. 3.80 கோடி என சாட்சிகள் அளித்த சாட்சியத்தை அவர் எடுத்துரைத்தார். அரசு வழக்குரைஞரின் வாதத்தை அடுத்து, நீதிபதி விசாரணையை வருகிற ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai