Enable Javscript for better performance
ஏப். 18-இல் முழு அடைப்புப் போராட்டம்:பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    ஏப். 18-இல் முழு அடைப்புப் போராட்டம்:பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

    By பெங்களூரு,  |   Published on : 17th April 2015 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் சனிக்கிழமை (ஏப்.18) நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கர்நாடக கூடுதல் டிஜிபி என்.எஸ்.மேகரிக் தெரிவித்தார்.

    மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தமிழக அரசைக் கண்டித்து கர்நாடக முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்புவிடுத்துள்ளது. இதற்கு பல்வேறு சங்கங்கள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    ஏப்.18-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தின் போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் பாதுகாப்பு வழங்க காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதுகுறித்து கர்நாடக கூடுதல் டிஜிபி என்.எஸ்.மேகரிக் கூறியது:

    கர்நாடக காவல் துறை அதிகாரிகள், காவலர்கள் பாதுகாப்புப் பணியில் முழுமையாக ஈடுபடுத்தப்படுவர்.

    பாதுகாப்புப் பணிக்கு மத்திய ஆயுதப் படையை வரவழைப்பது குறித்து முடிவெடுக்கவில்லை.

    மாவட்ட வாரியாக காவல் கண்காணிப்பாளர்கள், மாநகரங்களின் காவல் ஆணையர்களின் தலைமையில் பாதுகாப்பு

    ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு அளிக்கப்படும். எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.

    இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி கூறியது:

    கர்நாடக முழு அடைப்பு போராட்டத்தின் போது பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். உள்ளூர் காவலர்களுடன் இணைந்து விரைவு அதிரடிப் படையினர், சிறப்பு அதிரடி காவல் படையினர், மாநகர ஆயுத அதிரடிப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai