Enable Javscript for better performance
ரூ. 2,000 கோடி மதிப்புள்ள ஏரி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    ரூ. 2,000 கோடி மதிப்புள்ள ஏரி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

    By பெங்களூரு  |   Published on : 17th April 2015 05:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரில் ரூ. 2,000 கோடி மதிப்புள்ள ஏரி ஆக்கிரமிப்பு நிலங்களை மாவட்ட நிர்வாகம் மீட்டது.

    பெங்களூரு உத்தரஹள்ளி ஒன்றியத்தில் உள்ள சாரக்கி ஏரியைச் சுற்றியுள்ள 82 ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதை வருவாய்த் துறை அதிகாரிகள் அண்மையில் கண்டறிந்தனர்.

    இதனிடையே, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்குத் தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் சட்ட விரோதமான ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரி நிலங்களை மீட்குமாறு பெங்களூரு நகர மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து, ஆக்கிரமிக்கப்பட நிலங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், பள்ளி, கல்லூரிகளை கட்டியுள்ள அதன் உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் கடந்த சில நாள்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியது.

    இதை பொருள்படுத்தாத கட்டட உரிமையாளர்கள் இடத்தை காலி செய்யாமல் அலட்சியமாக இருந்தனர்.

    கட்டடங்கள் தரைமட்டம்

    கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், சாரக்கி ஏரி ஆக்கிரமிப்பு பகுதிக்கு வியாழக்கிழமை காலை 8 மணிக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் வி.சங்கர், ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து, வருவாய்த் துறையைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், 100 லாரிகள், 50 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் கட்டடங்களை தரைமட்டமாக்கி 34 ஏக்கர் நிலத்தை மீட்டனர்.

    ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது பொதுமக்கள் தொந்தரவு செய்தால், அதை சமாளிப்பதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜரகனஹள்ளி, புட்டேனஹள்ளி, சாரக்கி ஏரிப்பகுதியில் ஒரே நேரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.

    ஏரிப் பகுதியை சுற்றி 6 மீட்டர் தொலைவுக்கு ஆக்கிரப்பு நிலத்தை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். மீட்கப்பட்ட 34 ஏக்கர் நிலத்தில் 178 வீடுகள், 18 வணிக வளாகங்கள், 7 அடுக்குமாடிக் குடியிருப்புகள், 12 கோயில்கள், 1 அரசுப் பள்ளி, மருத்துவமனை, 2 கல்லூரிகள், 8 சிறிய வீடுகள், 3 விளையாட்டு மைதானங்கள், 1 அரசு அலுவலக கட்டடங்கள் இருந்தன.

    ஆக்கிரமிப்புகளை மீட்கும் பணி மேலும் சில நாள்களுக்கு தொடரும் என்று மாவட்ட ஆட்சியர் வி.சங்கர் தெரிவித்தார்.

    தடை உத்தரவு

    சாரக்கி ஏரிப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்தில் கட்டடப்பட்டுள்ள நந்தினி அடுக்குமாடிக் குடியிருப்பை இடிக்க ஊழியர்கள் முற்பட்டனர். அதற்குள் அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்த நிறுவனம், கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகி தடையாணை பெற்றிருந்தனர்.

    இதைத் தொடர்ந்து, நந்தினி அடுக்குமாடிக் குடியிருப்பை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. முன்னதாக, வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும், அடுக்குமாடிக் குடியிருப்பு நிறுவன பிரதிநிதிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

    இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணியை பார்க்க அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர்.

    சோகத்தில் மூழ்கிய மக்கள்

    ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டிருந்த வீடுகளை இடித்துவிட்டதால், அங்கு கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வந்த மக்கள் வீட்டை இழந்து, பாத்திரம், பண்டங்கள், குழந்தைகளுடன் செய்வதறியாது திகைத்துநின்றனர்.

    வீடுகளை இழந்து வீதிக்கு வந்துவிட்டதால் அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் சோகத்தில் மூழ்கினர். மறுவாழ்வு எதையும் செய்து தராமல், கட்டடங்களை இடித்துவிட்டதால் மக்களின் எதிர்காலம் குறித்து மாவட்ட ஆட்சியர் வி.சங்கருடன் ஒருசில சமூக ஆர்வலர்கள் வாதத்தில் ஈடுபட்டனர்.

    சட்ட விரோத கட்டடங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீடுகளை இடிக்க வேண்டாம் என்று ஆட்சியரிடம் பெண்கள் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தனர். ஆனாலும், அதை பொருள்படுத்தாத மாவட்ட ஆட்சியர் வி.சங்கர், சட்டப்படி செயல்படுவதாகக் கூறி கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai