Enable Javscript for better performance
அர்க்காவதி லே அவுட்: ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் பா.ஜ.க.வினர் ஒப்படைக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    அர்க்காவதி லே அவுட்: ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் பா.ஜ.க.வினர் ஒப்படைக்க வேண்டும்

    By பெங்களூரு  |   Published on : 27th January 2015 05:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அர்க்காவதி லே அவுட் நில விடுவிப்பு விவகாரத்தில் ஆதாரங்கள் இருந்தால் அவற்றை லோக் ஆயுக்த அல்லது நீதிமன்றத்தில் பாஜகவினர் ஒப்படைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.

    பெங்களூரு, குயின்ஸ் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    அர்க்காவதி லே அவுட் நில விடுவிப்பு விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. காங்கிரஸ் அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதே பாஜகவின் நோக்கம்.

    அர்க்காவதி லே அவுட் நில விடுவிப்பு விவகாரத்தில் ஆதாரங்கள் வைத்திருந்தால், அவற்றை லோக் ஆயுக்த அல்லது நீதிமன்றம் போன்ற விசாரணை மன்றங்களில் பாஜகவினர் ஒப்படைக்க வேண்டும். அர்க்காவதி லே அவுட் நில விடுவிப்பு விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு மக்களிடம் குழப்பம் ஏற்படுத்த பாஜகவினர் முயற்சிக்கக் கூடாது.

    அர்க்காவதி லே அவுட் நில விடுவிப்பு விவகாரத்தை விசாரிக்க முன்னாள் நீதிபதி கெம்பண்ணா தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்திலும் பாஜகவினர் ஆதாரங்களை அளிக்கலாம். இதற்குப் பதிலாக, மக்களைத் திசை திருப்ப பாஜகவினர் முயற்சிக்கக் கூடாது.

    ஆணையத்திடம் 59 புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், பாஜகவிடம் இருந்து எவ்விதப் புகாரும் அளிக்கப்படவில்லை.

    வரும் 30-ஆம் தேதி பெங்களூருவில் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் திக்விஜய்சிங் தலைமையில் கூட்டம் நடைபெறும்.

    தேர்தல் வாக்குறுதிகளை அரசு செயல்படுத்துகிறதா, புதிய திட்டங்கள் வகுப்பது, அரசுத் திட்டங்கள் மக்களை அடைந்துள்ளதா, அரசு மற்றும் கட்சி இடையே ஒருங்கிணைப்பு நிலவுகிறதா என்பது குறித்துக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

    நாட்டைப் பிளவுபடுத்த ஒருசிலர் முயற்சித்து வருகிறார்கள். அவர்கள்மீது மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முதல்வர் சித்தராமையா, பல்வேறு வாரியத் தலைவர்கள் எஸ்.எஸ்.பிரகாசம், எம்.ராமசந்திரப்பா, மல்லஜம்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai