Enable Javscript for better performance
\\\"அம்பேத்கரும், பெரியாரும் நாணயத்தின் இரு பக்கங்கள்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "அம்பேத்கரும், பெரியாரும் நாணயத்தின் இரு பக்கங்கள்'

    By பெங்களூரு  |   Published on : 15th April 2016 05:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அம்பேத்கரும், பெரியாரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் புகழாரம் சூட்டினார்.

    கர்நாடக திராவிடர் கழகம் சார்பில், பெங்களூரு ஆனந்தபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று அவர் பேசியது:

    இந்தியா கண்ட மிகவும் உன்னதமான தலைவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். கற்பி, ஒன்று சேர், புரட்சி என்ற தத்துவ முழக்கங்களைப் பரப்பி தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதை, சமூகப் புரட்சி உணர்வைத் தட்டி எழுப்பியவர் அம்பேத்கர்.

    அம்பேத்கரை தலித் மக்களின் தலைவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்த ஒருசிலர் முயற்சிக்கின்றனர். இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பாடுபட்ட காந்தியை போல, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரும் நமது நாட்டின் தேசியத் தலைவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ஆவார்.

    இந்தியாவில் வாழும் அனைத்துவகை ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமல்லாது, சமூக உரிமைகளை இழந்துவாடும் அனைவருக்குமான உயர்ந்த தலைவர் அம்பேத்கர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தில் வழிவகை கண்டவர் அம்பேத்கர்.

    அம்பேத்கரின் தொலைநோக்குச் சிந்தனையால் மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சத இட ஒதுக்கீட்டையும் உறுதி செய்ய முடிந்தது. தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை நேரத்தை சட்டமாக இயற்றி தந்தவர் அம்பேத்கர்.

    சாதாரண, ஏழை எளிய மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு காங்கிரஸ் உகந்த கட்சியல்ல என்பதை உணர்ந்து, அந்தக் கட்சியில் இருந்து டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், ராம்மனோகர் லோஹியா, பெரியார் ஆகியோர் வெளியேறினர்.

    அம்பேத்கரும், பெரியாரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். பகுத்தறிவு, மூடநம்பிக்கை, ஜாதி ஒழிப்பு போன்ற பல்வேறு கூறுகளில் இருவரும் ஒரே கருத்தியலைக் கொண்டிருந்தனர். அம்பேத்கரின் நூல்களை முதலில் தமிழுக்கு கொண்டு வந்தவர் தந்தை பெரியார்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அம்பேத்கரைவிட சிறந்தமுறையில் யாராலும் வகுத்திருக்க முடியாது. அந்த சட்ட மேதையின் தத்துவங்களை அனைத்து மக்களிடையேயும் பரப்புவதே அவருக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும் என்றார்.

    முன்னதாக, ஆனந்தபுரம் சதுக்கத்தில் இருந்த அம்பேத்கர் சிலைக்கு துரை.சந்திரசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிக்கு கர்நாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் மு.ஜானகிராமன் தலைமையேற்றார். செயலாளர் முல்லைக்கோ அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் மீனாட்சிசுந்தரம், கலைச்செல்வி, ந.குண்சேகர், பாலகிருட்டிணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, பெரியார் நகரிலும் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai