சுதந்திர தின மலர்க் கண்காட்சி வண்ணமயமாக தொடக்கம்

சுதந்திர தின மலர்க் கண்காட்சி பெங்களூரில் வண்ணமயமாக தொடங்கியது.

சுதந்திர தின மலர்க் கண்காட்சி பெங்களூரில் வண்ணமயமாக தொடங்கியது.

1912-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மைசூரு தோட்டக்கலை சங்கத்தின் சார்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பெங்களூரு, லால்பாக் பூங்காவில் சனிக்கிழமை 204-ஆவது மலர்க் கண்காட்சி தொடங்கப்பட்டது. கண்காட்சியை தோட்டக்கலைத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன் தொடக்கி வைத்தார்.

கண்காட்சியில் தொட்டிகளில் வைக்கப்பட்ட மலர்கள், கொய்த மலர்கள், தாய்லாந்து மலர் கலை, இகேபானா மலர் கலை, இந்திய மலர் கலை, குள்ளமலர்ச் செடிகள் (போன்சாய்), காய்கனி கலை வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. கண்ணாடி மாளிகையில் கர்நாடக தோட்டக்கலையின் தந்தை என போற்றப்படும் எம்.எச்.மரிகெளடாவின் சிலை மலர்களால் நிறுவப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளின் வெவ்வேறு ரகங்களைச் சேர்ந்த துலிப் மலர்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. ஊட்டியின் ஃபெர்ன்ஹில்ஸ் தோட்டத்தின் சார்பில் பசுமை எரிசக்தியை பறைசாற்றும் மிதவெப்ப தோட்ட மலர்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய-அமெரிக்க ரகங்களின் மலர்கள், தொங்கு தோட்ட மலர்கள், ஹவாய் நாட்டின் மலர்கள், அரியவகை மலர்ச்செடிகள் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

4 லட்சம் ரோஜா மலர்களால் ஆன 38 அடி சுற்றறளவு, 28 அடி உயரம் கொண்ட இந்திய நாடாளுமன்றக் கட்டடத்தின் மாதிரி வடிவம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட அழகு மிளிரும் சிவப்பு, மஞ்சள், வெள்ளை ரோஜா மலர்களால் நாடாளுமன்றத்துக்கு உயிரூட்டப்பட்டுள்ளது. அதேபோல, லால்பாக் பூங்காவின் 3 இடங்களில் மலர்களால் ஆன பிரமீடுகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் தேசியப் பறவையான மயில், நடனமாடும் வடிவில் காய்கள் மற்றும் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தின் மிகவும் உயரமான மூங்கில் மரங்களும் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, செங்குத்தான தோட்டம் மற்றும் போன்சாய் செடிகளும் கண்காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்தன.

முன்னதாக, கண்காட்சியை தொடக்கிவைத்த தோட்டக்கலைத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன் செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூரு மாநகரின் மகுடங்களாக திகழும் லால்பாக் மற்றும் கப்பன் பூங்காக்களை மேலும் அழகூட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரு பூங்காக்களையும் அழகாக்க நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். இதேபோல, கர்நாடகத்தின் 4 நகரங்களில் மிக பிரம்மாண்டமான பூங்காக்கள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றார். அப்போது தோட்டக்கலைத் துறை இயக்குநர் சிவக்குமார், சங்க துணைத் தலைவர் ஸ்ரீகண்டையா, இயக்குநர் குப்புசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆக.11,15-இல் மாணவர்களுக்கு இலவசம்

ஆக.15-ஆம் தேதி வரை நடைபெறும் மலர்க் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக தினமும் காலை 9 முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். ஆக.11, 15-ஆம் தேதிகளில் மட்டும் காலை 9 மணி முதல் 5 மணி வரை கண்காட்சியை காண ஒன்று முதல் பத்தாம் வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படுகிறது. கண்காட்சியை காண சாதாரண நாள்களில் பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.20, விடுமுறை நாள்களில் பெரியவர்களுக்கு ரூ.60, சிறியவர்களுக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com